Skip to Main Navigation
Results Briefs அக்டோபர் 21, 2020

இலங்கையின் கொவிட்-19 பிரதிபலிப்பு: இன்று உயிர்களைப் பாதுகாப்போம், நாளைய நாளுக்குத் தயாராவோம்

Image

Shutterstock


அத்தியாவசிய மருத்துவ தேவைகள், சோதனை கருவிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு உதவுதல் மற்றும் 32 தனிமைப்படுத்தல் நிலையங்களைப் பராமரித்தல் ஆகியவற்றை தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் 'சோதனை, தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல்' மூலோபாயத்திற்கு இலங்கை கொவிட் -19 அவசர பிரதிபலிப்பு மற்றும் சுகாதார முறைகள் தயார்நிலைத் திட்டம் உதவுகின்றது. எதிர்காலத்தில் சுகாதார அவசரநிலைகளைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கு சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதிலும் இது பணியாற்றி வருகிறது.

சவால்

2020 மார்ச் 11 ஆம் திகதியன்று, உலக சுகாதார நிறுவனம் (WHO) கொவிட்-19 ஐ உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. இலங்கை வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையினாலும், ஏராளமான வெளிநாட்டினராலும் வைரஸ் பரவலினால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது. முதல் தொற்றாளர் 2020 சனவரி 27 ஆம் திகதி இனங்காணப்பட்டதுடன் முதல் இலங்கை நாட்டவர் 2020 மார்ச் 10 ஆம் திகதியன்று  கொவிட் -19 தொற்றாளராக இனங்காணப்பட்டார்.  இதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை அரசாங்கமானது, நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக அறிமுகப்படுத்தியதுடன் 2020 மார்ச் 16 ஆம் திகதி நாடளாவிய முடக்கத்தை நடைமுறைப்படுத்தியது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதுகாப்பான சூழலில் சிகிச்சை பெற்றனர், சோதனை மற்றும் தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகள் விரைவாக அதிகரித்தன, மேலும் ஆபத்து மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பிரச்சாரங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏற்கனவே நிதி தடைகளை எதிர்கொண்டுள்ள வேளையில், இந்த தொற்றுநோய் நாட்டின் மீது மேலதிகமான வளக் கோரிக்கைகளை முன்வைத்தது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிதி, தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் உதவியைத் திரட்டுவதை விரைவாக ஒருங்கிணைப்பதே சவாலாக இருந்தது.

 

Image
Photo Credit: Samitha Darshanika Senadheera / World Bank

அணுகுமுறை

இந்த சூழலில் உலக வங்கியானது, வளங்களைத் திரட்டவும், செயல்திட்டத்தை வெறும் 10 வேலை நாட்களில் தயாரிக்கவும் அர்ப்பணிப்புள்ள COVID-19 ஃபாஸ்ட்-ட்ராக் வசதியை(COVID-19 Fast-Track Facility) மேம்படுத்தி  விரைவாக பதிலளித்தது. சுகாதார அமைச்சு (MoH) மற்றும் ஏனையோர்களிடையே உலக சுகாதார நிறுவனம் (WHO), உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உள்ளிட்ட அபிவிருத்தி கூட்டாளர்களால் உருவாக்கப்பட்டு வந்த சுகாதார பேரழிவு தயார்நிலை, பதிலளிப்பு மற்றும் மீட்பு திட்டத்தில் (Health Disaster Preparedness, Response and Recovery plan)கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இடைவெளிகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் தனித்தனி விரிவான வடிவமைப்பு கலந்துரையாடல்கள், உத்திகள் மற்றும் செயல்திட்ட முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கான சுகாதாரத் தலைமையின் வரையறுக்கப்பட்ட கிடைப்பனவை அங்கீகரித்தல். இந்த அணுகுமுறையானது, பல கூட்டாளர்களின் ஒருங்கிணைந்த நிதி ஆதரவை உறுதிப்படுத்தும் அதேவேளை, விரைவாகத் தயாராவதற்கு உதவியது. வள இடைவெளிகளை நிரப்பவும், இலங்கையின் தொற்று முகாமைத்துவ மூலோபாயத்தை மேம்படுத்தவும் இயலளவை அதிகரிப்பதற்கும் வங்கி நிதி பயன்படுத்தப்பட்டது.

கொவிட்-19 பதிலளிப்பில் ஈடுபட்டுள்ள வசதிகளுக்கான வழக்கமான பொருட்களுக்கு திருப்பிச் செலுத்துதல் மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் ஆகியவற்றை செயல்படுத்தி இந்த செயல்திட்டம் அவசர சுகாதார தேவைகளுக்கு பதிலளிப்பதற்கு ஒரு நெகிழ்வான அணுகுமுறையை பின்பற்றியது. இது அடையாளம் காணப்பட்ட வசதிகள் தங்கள் வார்டுகளை கொவிட்- தயார்நிலையுடையவையாக விரைவாக மேம்படுத்துவதற்கு உதவியது. செயல்திட்டத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து முதல் மூன்று மாதங்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் பெறுகை முறைகளைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை (முன்கூட்டிய பெறுகைக் கொள்கைகளை பின்பற்றுதல்) வழங்கப்பட்டது.

தேசிய அவசரகால செயல்பாட்டு பிரிவு மற்றும் அதன் நாடளாவிய வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறந்த தயார்நிலைக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் தற்போதைய மற்றும் எதிர்கால தொற்றுநோய்களுக்கான மருத்துவ மையங்களாக இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் தற்போதுள்ள ஆய்வக அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் தொற்று கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும், பரவும் முறைகள் மற்றும் சமூக பதிலளிப்பு மற்றும் நடத்தை பற்றிய தொற்றுநோயியல் ஆய்வுகளுக்கு இந்த செயல்திட்டம் உதவுகிறது. இந்த ஆராய்ச்சி தொற்றுநோய் முகாமைத்துவம் குறித்த நீண்டகால திட்டங்கள் மற்றும் மூலோபாயங்களை ஆதரிக்கும்.


Image
Shutterstock

முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள மக்களுக்கு பண பரிமாற்ற வடிவத்தில் உலக வங்கி கூடுதலான நிதி உதவிகளையும் வழங்கியது. இந்த சமூகத் துறை பதிலளிப்பானது,  கொவிட்-19 காரணமாகத் தோன்றிய பாதிப்புகளை நிர்வகிப்பதற்கான சுகாதாரத் துறையின் பதிலளிப்பிற்கு மேலதிகமாக இருந்தது.

குறிப்பாக அவசரகால சூழ்நிலைகளில் மனநல சுகாதார சேவைகள் மற்றும் சமூக மட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான (GBV) சேவைகளை இந்த திட்டம் பலப்படுத்தும். இந்த நடவடிக்கைகள் தொற்று அவசர நிதி வசதியால் (Pandemic Emergency Financing Facility (PEF)) வழங்கப்படும் மானியத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

பெறுபேறுகள்

திட்ட அமுலாக்கத்தின் ஆறு மாதங்களுக்குள், சர்வதேச அபிவிருத்திச்  சங்கம் (IDA) மற்றும் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD) மூலம்  வழங்கப்பட்ட உலக வங்கி நிதியுதவியானது  2020 மார்ச் மற்றும் ஒக்டோபர்   மாதங்களுக்கிடையில் பின்வரும் பெறுபேறுகளில்  பங்களிப்புச் செய்தது:

  • 2020 ஒக்டோபர் 1 ஆம் திகிய, நிலவரப்படி, இலங்கையில் மொத்தம் 3,380 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள் இருந்தனர். இவர்களுள் 3,233 முழுமையாகக் குணமடைந்துள்ளதுடன்  13 பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட் - 19 இன் பரவலானது நாட்டின் 26 மாவட்டங்களில் 18 மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, 8 மாவட்டங்களில் நோயாளர் எவரும் கண்டறியப்படவில்லை. கொவிட் - 19 நோயாளிகள் உள்ள 18 மாவட்டங்களில் கூட, 6 மாவட்டங்களிலேயே அதிகமான நோயாளிகள் உள்ளனர், தலைநகரான கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலான நோயாளிகள் உள்ளனர். மீதமுள்ள 12 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு 10 க்கும் குறைவான நோயாளிகளே உள்ளனர். இந்த ஒப்பீட்டளவில் குறைந்த கொவிட்-19 நோயுற்ற தன்மை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை, அரசாங்கத்தின் வலுவான மற்றும் விரைவான பதிலளிப்பினையும் இந்த திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும் ‘சோதனை, தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைமூலோபாயத்தினைத் திறம்பட செயல்படுத்தலையும் பிரதிபலிக்கிறது.
  • அத்தியாவசிய மருத்துவ நுகர்பொருட்களுடன் (சிகிச்சை’) 300,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண (PPE) அலகுகளும் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன; 32 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன (தனிமைப்படுத்து’); மற்றும் 250,000 பி.சி.ஆர் சோதனைக் கருவிகள் செயல்திட்டத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன, வெளிநோயாளர் பிரிவுகளிலும், சமூக அமைப்புகளிலும், நுழைவுத் துறைமுகங்களிலும் (சோதனை’) எழுமாறான  சோதனைக்கு உதவுகின்றன.
  • 805 பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு தொடர்புகளைக் கண்டறிவதற்காகப் பயணிக்க மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன; மற்றும் அடிமட்ட சமூக நலனை மேம்படுத்துவதற்காக (தடயமறிதல்’) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் (RDHS) 25 அலுவலகங்களுக்கு இரட்டை கெப் வண்டிகள் (பிக்-அப் டிரக்குகள்) வழங்கப்பட்டுள்ளன.
  • நாட்டின் அனைத்து பகுதிகளும் உள்ளடங்கும் விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளை 9 மாகாண நோய்  முகாமைத்துவ மத்திய நிலையங்களாகவும், 25 மாவட்ட அளவிலான சந்தேகத்திற்கிடமான நோய்  முகாமைத்துவ மத்திய நிலையங்களாகவும்  மாற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்ப  வடிவமைப்பு நிலை நிறைவடைந்துள்ளதுடன் தற்போது தள ஆய்வுகள் நடந்து வருகின்றன. அர்ப்பணிக்கப்பட்ட தனிமைப்படுத்தல்  வார்டுகள், வலுவான தொற்று கட்டுப்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவ முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆய்வக வசதிகளுடன் இந்த மத்திய நிலையங்கள் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (MRI) உயிரியல்  பாதுகாப்பு மட்டம் 3 ஆய்வகத்தை நிறுவுவதற்கான ஆரம்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • 699,915 பாதிக்கப்படக்கூடிய மக்கள், இதில் முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து நீண்டகால சிறுநீரக நோய் உள்ளவர்கள் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமூக பணப் பரிமாற்றத்தால் பயனடைந்தனர்.

300,000 units of PPE

have been procured and delivered, along with essential medical consumables (‘treat’)


வங்கிக் குழுப் பங்களிப்பு

இந்த திட்டத்திற்காக உலக வங்கி 217.56 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) 35 மில்லியன் டொலர் கடனும், சர்வதேச அபிவிருத்தி சங்கத்திலிருந்து (IDA) 180.84 மில்லியன் டொலர்களும், அவசர தொற்று நிதி வசதி (PEF) இலிருந்து 1.72 மில்லியன் டொலர் மானியமும் இதில் அடங்கும்.

பங்காளர்கள்

இலங்கையின் கொவிட் -19 முகாமைத்துவ மூலோபாயமானது சுகாதார அமைச்சினால் வழிநடத்தப்படுவதுடன், இது   உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப் (UNICEF) மற்றும் பிற ஐக்கிய நாடுகள் முகவராண்மைகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பங்காளர்களின் வலையமைப்பின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) தலைமையிலான அவசர சுகாதாரக் கொத்தணிக் கூட்டங்களில் வங்கி இயக்கபூர்வமாகப் பங்கேற்றுள்ளது,  மேலும் சுகாதார தயார்நிலைக்கான நடுத்தர முதல் நீண்டகால திட்டங்களை ஒருங்கிணைக்கும் சுகாதார அபிவிருத்திப் பங்காளர் செயற்குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளது. அத்தியாவசிய மருத்துவ நுகர்பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPEs) கொள்வனவு  செய்வதில் சுகாதார அமைச்சிற்கு உதவும் திட்டத்தின் கீழ் யுனிசெஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பங்காளர் வலையமைப்புடனான வழக்கமான உரையாடல் மற்றும் ஒருங்கிணைப்பு நகலெடுப்பைத் தடுக்க உதவியதுடன், நாட்டின் அவசரகால பதிலளிப்பு மூலோபாயத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து, செயல்திட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வங்கிக்கு உதவியது. ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைகளைப் பலப்படுத்தும் செயல்திட்டம் (Primary Health Care Systems Strengthening Project (PSSP)உள்ளிட்ட முந்தைய மற்றும் நடந்துகொண்டிருக்கும் செயல்திட்டங்கள் மூலம் நிறுவப்பட்ட சுகாதார அமைச்சுடனான நெருக்கமான பணி உறவால் இது பலப்படுத்தப்படுகிறது.

முன்னேறுதல்

2004 ஆம் ஆண்டு முதல், உலக வங்கியானது இலங்கையில் இரண்டு பெரிய சுகாதாரத் துறை அபிவிருத்தித் திட்டங்களுக்கு (health sector development projects) நிதியளித்துள்ளது, இது சுகாதாரத் துறை சேவை வழங்கலை வலுப்படுத்துவதையும், பராமரிப்பின் தரத்தையும், அவசர சிகிச்சை பிரிவு வசதிகளை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் சுகாதார சவால்களுக்கு பதிலளிக்க துறையைத் தயார் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முதலீடுகள் இலங்கையின் கொவிட் -19 பதிலளிப்பு மூலோபாயத்தின் மூலாதாரமாகவிருந்த சுகாதார சேவை விநியோக வலையமைப்பை வலுப்படுத்த உதவியுள்ளன. இந்த செயல்திட்டமானது  முன்னோக்கிச் சென்று, வரவிருக்கும் ஆண்டுகளில்  இலங்கை மக்களுக்கு பயனளிக்கும்  தேசிய மூலோபாயங்கள்  மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மட்டங்களில் அவசரகால சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்வதைத் தொடரும், மற்றும் திறன்களை வளர்த்து, அவசரகால பதிலளிப்பு முறைகள், பொறிமுறைகள் மற்றும் வசதிகளை நிறுவும்.

Image
Shutterstock

பயனாளிகள்

இந்த செயல்திட்டம் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவசரகால பதிலளிப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலமும், உயிர்களை காப்பாற்ற பங்களிப்பதன் மூலமும் நன்மையளித்துள்ளது. தொற்றாளர்கள், மருத்துவ மற்றும் அவசரகால பணியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் நோயாளிகள் போன்ற அதிக ஆபத்து உள்ளவர்கள் குறிப்பாக பயனடைந்துள்ளனர்; மக்கள் தொகை அடிப்படையிலான தடுப்பு நடவடிக்கைகள் மூலம், இந்த திட்டம் இலங்கையில் உள்ள அனைவரின் வாழ்க்கையையும் தொட்டுள்ளது. மேலும், எதிர்கால தொற்றுநோய்க்கு நாடு முழுவதும் பொது சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம், அது தொடர்ந்து இலங்கை மக்களுக்கு பயனளிக்கும்.