கொழும்பு, 2021 மே 06,— உலக வங்கி இன்று இலங்கையில் தனது கட்டமைப்புசார் நாடு கண்டறிதலை (SCD) இற்றைப்படுத்துவதற்கான பொதுமக்கள் ஆலோசனைகளை ஆரம்பித்தது . இந்த இணையமூலமான தளமானது வங்கியானது இலங்கையின் பொது மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளுடன் ஈடுபடவும், நாட்டிற்கான மிக முக்கியமான அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து அவர்களின் கருத்துக்களைத் தேடவும் உதவும்.
SCD என்பது உரிய தேசிய அதிகாரசபைகள், அக்கறையுள்ளோர் மற்றும் பொதுமக்களுடனான நெருக்கமான ஆலோசனையுடன் உலக வங்கிக் குழுமத்தால் தொகுக்கப்பட்ட ஒரு நாடு சார்ந்த அறிக்கையாகும். இது உலக வங்கிக் குழுமமானது தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இலக்குகளை அடைவதற்கும், பகிரப்பட்ட செழுமையை நிலையான முறையில் ஊக்குவிப்பதற்கும் எவ்வாறு நாட்டிற்குச் சிறந்த பங்களிப்பை அளிக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டும் வதிவிட பங்காளித்துவக் கட்டமைப்புத் தந்திரோபாயத்திற்கு ஒரு அடிப்படையை வழங்குகின்றது.
"அரசாங்கம், தனியார் துறை, பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த குடிமக்கள், அறிவுசார் குழுமங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆகிய பலதரப்பட்ட அபிவிருத்திப் பங்காளர்களிடமிருந்து நாங்கள் செவிமடுக்க ஆர்வமாக உள்ளோம்" என்று மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளராகிய பாரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ் கூறினார். "இலங்கையின் பசுமையான, நெகிழக்கூடிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய மீட்பு மற்றும் வளர்ச்சியைப் போசிப்பதில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் கவனம் செலுத்துவதற்கு SCD க்கு அவர்களின் உள்ளீடுகள் உதவும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுநோயின் முன்னோடியில்லாத வகையிலான சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களிலிருந்து உருவாகும் புதிய மற்றும் அழுத்தமான சிக்கல்களை கவனத்திற்கொண்டு, 2021 கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதலானது (SCD) முன்னைய SCD மீதான இற்றைப்படுத்தலாக இருக்கும்.
இணைய மூலமான கணக்கெடுப்புக்கள் 2021மே 6 ஆம் திகதி முதல் 2021 மே 20 ஆம் திகதி வரை திறந்திருப்பதுடன் அவை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும். இந்த செயல்முறையானது பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய இலக்குக் குழு கலந்துரையாடல்களால் பூர்த்தி செய்யப்படும். ஆலோசனைகளின் கண்டுபிடிப்புகள் SCD இன் அடுத்த இற்றைப்படுத்தலில் பிரதிபலிக்கும்.
இலங்கையில் தற்போதைய உலக வங்கி முதலீட்டுப் பரப்பெல்லையானது 19 செயலிலுள்ள திட்டங்களைக் கொண்டுள்ளதுடன் அது போக்குவரத்து, நகர்ப்புறம், விவசாயம், நீர், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 2.33 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த முதலீட்டினை மேற்கொண்டுள்ளது.