உலக வங்கிக் குழுமமானது தற்போது இலங்கைக்கான கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதலைத் (SCD) தெரிவிப்பதற்காகவும் இற்றைப்படுத்துவதற்காகவும் தற்போது ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதலானது (SCD) ஒவ்வொரு புதிய வதிவிட பங்காளித்துவ கட்டமைப்பையும் (CPF) தெரிவிக்கிறது. கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதலின் (SCD) நோக்கமாவது, தீவிர வறுமையை ஒழித்தல் மற்றும் பகிரப்பட்ட செழுமையை ஊக்குவித்தல் ஆகிய இரட்டை இலக்குகளை நோக்கி முன்னேறும் போது ஒரு நாடு எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதாகும். இது ஒரு முழுமையான பகுப்பாய்விலிருந்து பெறப்படுவதுடன், இது பல தரப்பினருடனான ஆலோசனைகளால் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான முதல் கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதலானது (SCD) 2015 இல் நடாத்தப்பட்டது. இரட்டை இலக்குகளில் நாட்டின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் அதன் முழுமையான வளர்ச்சித் திறனை உணர்ந்து கொள்வதற்கும் ஐந்து முக்கிய சவால்களை இது அடையாளம் கண்டுள்ளது. அவையாவன:
1. நிதி பாதிப்புகள்
2. கீழ் 40 சதவீத வளர்ச்சி மற்றும் தொழில்களைப் போசித்தல்
3. சமூக உள்ளடக்கம்
4. ஆளுகை சிக்கல்கள்
5. நிலைத்தன்மை
2015 கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதலில் (SCD) அடையாளம் காணப்பட்ட தடைகள் இலங்கையை வேகமாகவும், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், வறுமையைத் தணிப்பதற்கும், பகிரப்பட்ட செழுமையை அடைவதற்கும் மேலும் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கின்றன. கொவிட்-19 தொற்றுநோயின் முன்னோடியில்லாத வகையிலான சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களிலிருந்து உருவாகும் புதிய மற்றும் அழுத்தமான சிக்கல்களை கவனத்திற்கொண்டு, 2021 கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதலானது (SCD) முன்னைய SCD மீதான இற்றைப்படுத்தலாக இருக்கும்.
இலங்கையில் முன்னைய SCD ஆல் அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி சவால்களை புதுப்பிக்கவும், சரிபார்க்கவும், முன்னுரிமை அளிக்கவும் உலக வங்கி குழுமம் தற்போது பொதுமக்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் கூட்டாக சிந்திக்க பொது மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலக்குக் குழுக் கலந்துரையாடல்கள் பொது மக்களுக்காக திறந்திருக்கும் இணைய மூலமான கணக்கெடுப்புகளால் பூர்த்தி செய்யப்படும். 2021மே 6 ஆம் திகதி முதல் 2021 மே 20 ஆம் திகதி வரை, அனைத்து இலங்கையர்களும் பின்வரும் விடயங்கள் தொடர்பாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்:
· நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல்
· உற்பத்தித்திறன் மற்றும் தொழில் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக போட்டியை அதிகரித்தல்
· வறுமையைக் குறைப்பதற்கும் பகிரப்பட்ட செழுமையை ஊக்குவிப்பதற்கும் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்
· நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளல்
ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பதன் மூலம் இந்த முக்கியமான கலந்துரையாடலுக்கு உங்கள் கருத்துக்களை வழங்கலாம்.
இலங்கையில் SCD ஆலோசனைகள் குறித்த சமீபத்திய இற்றைப்படுத்தல்களுக்கு World Bank South Asia வை டுவிட்டரில் (@WorldBankSAsia) அல்லது முகநூலில் (/WorldBankSriLanka அல்லது /WorldBankSouthAsia) பின்தொடரவும்.
மேலதிக விபரங்களுக்கு, தயவுசெய்து infosrilanka@worldbank.org மின்னஞ்சல் அனுப்பவும்.
கடைசியாகப் புதிய தகவல் சேர்த்தது: மே 6, 2021