சிறப்பம்சக் கதை மே 1, 2018

தொழில் தருனர்களிடம் குடும்ப சூழலுக்கு இணக்கமான கொள்கைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தும் இலங்கையர்.


கதை சிறப்புக்கூறுகள்

  • #PressForProgress இயக்கத்தில் இணைதலுடன், உலக வங்கியின் இலங்கை பிரிவு முன்னெடுத்த ஒரு ஆய்வின் மூலம் தொழில்சக்தியில் இலங்கைப் பெண்களையும் இணைத்து அதன் வழியாக கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரும் ஒரு வழியை உருவாக்க முனைந்திருந்தோம்.
  • மிகச் சிறந்த தொழில் வழங்குநர்கள், நெகிழ்வு தன்மையான நேரங்களுடன் , தொழிலிடங்களில் குழந்தைப் பராமரிப்புக்கான வசதிகளுடன் கூடிய குடும்ப சூழலுக்கு ஏதுவான கொள்கைகளைக் கடைப்பிடிக்கும்.
  • வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் பாலியல் தொந்தரவுகளுக்கு எந்தவிதமான சகிப்புத்தன்மையுமற்ற நேர்த்தியான அர்ப்பணிப்பை வழங்கக்கூடிய சட்ட அமைப்பு முக்கியமானது.

சர்வதேச மகளிர் தினத்தின்  #PressForProgress திட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கையிலுள்ள உலக வங்கியின் அலுவலகம் இலங்கையில் பெண் தொழிலாளர்களின் தொழில்சார் பங்களிப்பை எவ்வாறு சீர்ப்படுத்துவதுடன் சந்தர்ப்பங்களையும் முன்னுரிமைகளையும் அதிகரிக்கலாம் என்பது பற்றிய கருத்துக்களை அறிய இலங்கையர்களை அழைத்திருந்தது. இந்தக்  கருத்துக்கணிப்பின் இன்னொரு நோக்கமாக இலங்கையில் பெண்களை வேலைத்தளங்களில் இருந்து புறந்தள்ளி வைத்துள்ள காரணிகளை அடையாளம் காண்பதும்,பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவியை வழங்குவதற்கான உறுதியான படிகளை எடுப்பதுமாகும். 

இந்தக் கருத்துக்கணிப்பையும் உங்களது முன்மாதிரி யார் என்ற நிழற்படப் போட்டி முடிவையும் அறிவித்த வலைப்பதிவு ஒன்றில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தேசப் பணிப்பாளராக இடா ஸ்வராய் ரிடிஹாவ், இலங்கையானது விரைவாக வயதடைந்து வருவதன் காரணமாக, இலங்கையின் தன்னிறைவானது தொழிலாளர் சக்தியாக இணைந்து கொள்ளும் பெண்களிலேயே தங்கியிருப்பது பற்றி வலியுறுத்தி "இலங்கையானது பணக்கார நாடாக மாறுமுன்னரே வயது முதிர்ந்தோரைக் கொண்ட நாடாகிவருகிறது.போதுமானளவு தொழிலாளர் இல்லாமல் இந்நாடு போட்டியிடும் தன்மையைக் கொள்ள முடியாது. இதனால் அடிப்படையான சேவைகளை வழங்குவதும் சேவைகளை வழங்குவதற்குத் தேவைப்படும் வருமானத்தைப் பெற்றுக்கொள்வதிலும் இடர்ப்பாடுகளை சந்திக்கவேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

எமக்கு கிடைத்த பதில்களில் நாம் திருப்தியடைந்தோம். எனினும் இன்னும் அதிக பதில்கள் கிடைத்திருந்தால் மிக மகிழ்ந்திருப்போம்.பதிலளித்த 239 பேரில் 169 பேர் பெண்கள், 69 பேர் ஆண்களாவர்.இவர்களில் அநேகர் 25 முதல் 35 வயதுடையவராகவும் பலர் பட்டதாரிகளாகவோ, பின் பட்டதாரிகளாவோ இருந்தனர்.

பெண்கள் தொழில்களுக்குச் செல்வதில் இருக்கும் 3 முக்கியமான சவால்களைப் பற்றி கேட்ட போது, பதிலளித்தோரில் 46% மானோர் பெற்றோராயிருத்தல் மற்றும் குழந்தைப் பராமரித்தல் என்பதையும், சமூக கலாசார விதிமுறைகளை 21%மானோரும், அதற்கடுத்தபடியாக வேலைத்தளங்களில் பாலியல் தொந்தரவுகளையும் (15%) குறிப்பிட்டிருந்தனர்.

ஆண்களும் பெண்களும் தமக்கிடையில் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்

"இங்கே பெண்ணானவள் பாரம்பரியமாக எதிர்பார்க்கப்படுவதை போல வீடுகளில் 100 வீதப் பொறுப்பை நிறைவேற்றவேண்டும் (தினசரி சமையல், குழந்தை மற்றும் வயதானவர்களைப் பராமரித்தல் ) என்றும் அதேபோல அலுவலகத்திலும் தனது 100 வீதப் பங்களிப்பை வழங்கவேண்டும் என்று இருக்கிறது" என்று பதிலளித்தவர்களில் ஒருவர் கூறினார்.

எனவே, பெண்களும் ஆண்களும் பெற்றோராகினாலும் பெண்கள் தான் பிரதான குழந்தைப் பராமரிப்பாளராக இருக்கவேண்டும் என்றொரு எண்ணம் நிலவுகிறது."எனது பெண் நண்பிகள் பலரிடம் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் அவர்கள் என்ன வயதில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் எத்தனை குழந்தைகளைப் பெறும் எண்ணம் கொண்டுள்ளார்கள் என்றும் கேட்கப்பட்டது" என்றார் பதிலளித்தொரில் இன்னொருவர்.

சமாளித்து தொடர்ந்தும் வேலைக்குச் செல்வோரில் பலர் இன்னும் கடினமான சவால்களை சந்திக்கின்றனர். பதிலளித்தோர் வீட்டிலும் வேலைத்தலங்களிலும் பொறுப்புக்களை மாறி மாறிக் கையாள்வது (89%), நீண்ட பனி நேரம் மற்றும் மேலதிக நேரம் வேலை செய்வதிலுள்ள சிரமங்கள் (73%) மற்றும் குழந்தைப் பராமரிப்புக்கு தகுந்த வழிகளைக் கண்டறிவதிலுள்ள சிரமங்கள் (79%) ஆகியவற்றை மிகப் பெரிய சவால்களாக  அடையாளப்படுத்தினர். நெகிழ்வுத்தன்மை இல்லாத தொழில் கொள்கை மற்றும் பொறிமுறை கொண்ட தொழிலிடங்கள் காரணமாக சிறுகுழந்தைகள் மற்றும் மிக இளவயதுப் பிள்ளைகளைக் கொண்ட தாய்மார் பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு மீண்டும் தொழிலுக்குத் திரும்புவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றார் இன்னொருவர்.

ஆண்களும் பெண்களும் திருமண மற்றும் தொழில்சார் வாழ்க்கைக்கான சமநிலையை எப்படி பேணிக்கொள்ளலாம் என்று கேட்கப்பட்டபோது, மிகப்பெரும்பான்மையானோர் சொன்ன பதில் ஆண்களும் பெண்களும் குடும்பப் பொறுப்புக்களை சரிசமனாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம், இருவரும் தமது வருமானம் மூலம் குடும்பத்துக்குப் பங்களிக்கலாம் என்பதே. 85%க்கும் அதிகமானோர், பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதானால் குடும்பப் பொறுப்புக்களை வீட்டில் பகிர்ந்து கொள்வது மிக இன்றியமையாதது எனத் தெரிவித்தனர்.

ஆனால் சமநிலையான இந்தப் பகிர்வுக்கு பிரதான அடிப்படியாக அமைவது குடும்ப நிலையில் அணுகுமுறைகளில் ஏற்படுத்தவேண்டிய அவசிய மாற்றங்கள். 

"தந்தையாக பொறுப்பேற்றல் மற்றும் வீட்டில் பால்நிலை வகைமையில் பொறுப்புக்களைப் பகிரல் என்ற கருத்தை" பிரபல்யப்படுத்தவேண்டிய அவசியமுள்ளது.இந்த அணுகுமுறை மாற்றங்களை நடைமுறைப்படுத்த யதார்த்த நடைமுறைகள் எடுக்கப்படவேண்டும். குறிப்பாக குழந்தைப் பராமரிப்பும் வேலைப்பொறுப்பும் உடைய பெற்றோருக்கு உதவக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட  வேலைநேரங்கள் பற்றிக் குறிப்பிட்ட பதிலளித்தவர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய மற்றும் வேலைத்தளங்களில் நம்பகமான குழந்தைப் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தக்கூடிய தொழிற் கொள்கைகளை வலியுறுத்தினர்.


Image

Check out the infographic.

World Bank


சமூக மற்றும் கலாசார விதிமுறைகள் பெண்களின் தொழில்சார் வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன

பதிலளித்தவர்கள் தனியார் தொழில் வழங்குநர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு சிக்கல்கள், குறிப்பாக வெளிக்கள வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ,பெண்களுக்கு வேலை வழங்குவதை சுமையாகப் பார்க்கிறார்கள் என்பதை குறிப்பிட்டுக்காட்டினர்.அத்தோடு பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை வழங்கப்படவேண்டியிருப்பதால் மேலதிக முதலீடுகள் தேவைப்படுகின்றன என்ற எண்ணம் பரவலாக இருப்பதால், வேலைக்கு உள்வாங்குவதில் இருந்து பதவியுயர்வுகள் வரை பாலினப்பாகுபாடு தொடர்கிறது.

பதிலளித்தோர் இன்னமும் 'ஆண்கள் மட்டும்' என்றொரு எண்ணப்பாங்கு வேலைத்தளங்களில் இருப்பதாக உணர்கின்றனர். பெண்கள் ஆண்களை விட இரு மடங்கு தங்கள் ஆற்றலை நிரூபிக்கவேண்டியவர்களாக இருப்பதாக ஒருவர் குறிப்பிடுகிறார். ஊதிய வேறுபாடுகள் இன்னமும் காணப்படுவதோடு, தகுதிகளும் அனுபவமும் சமமாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் கூட ஆண்களை விடப் பெண்களுக்கு குறைந்தளவு ஊதியமே வழங்கப்படுகிறது. நியாயமற்ற இந்த வேறுபாடு பதவியுயர்வு கிடைத்த பெண்களிடமும் வெளிப்படுத்தப்படுகிறது.முகாமைத்துவப் பதவிகளுக்கு உயர்த்தப்பட்ட பெண்கள் தங்கள் ஆண் சகாக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததாகத் தெரிவிக்கின்றனர். "தொழிலிடங்களில் பெண்கள் உத்தரவிடுவதை ஆண்கள் விரும்புவதில்லை" என்கிறார் ஒரு பதிலளித்தவர். "உங்களிடம் சகல திறமைகளும் தகமைகளும் இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் எதுவும் கிடைக்காது".

இந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான முக்கியமான விடயமாக "தொழில் செய்யும் தாய்மார் மற்றும் பெண்களினைப் பொதுவெளிதனில் ஏற்கும் பாராட்டும்" நடைமுறையைப் பிரபல்யப்படுத்துவது தான் என்கிறார் ஒருவர் .

வேலைத்தளங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தொந்தரவுகளை அனுபவிக்கும் பெண்கள்

வேலைக்குச் செல்வது அநேகமாக ஒரு சவாலான விடயம் தான். ஆய்வுக்குப் பதில் சொன்னோரில் 45% ஆனவர்கள் நம்பகமானதும் பாதுகாப்பானதுமான பொதுப் போக்குவரத்து இன்மையானதே பெண்களை தொழில்களில் இருந்து தள்ளியே வைத்திருப்பதாக அடையாளம் காட்டினர். பதிலளித்தவரில் ஒரு பெண் தன்னுடைய தனிப்பட்ட போராட்டத்தையும் பகிர்ந்துகொண்டார் : " இரவில் வீடு திரும்பும்போது போக்குவரத்தானது பெரிய ஒரு சிக்கலானது. இதற்காக என்னுடைய தந்தையை அல்லது கணவனை நான் தங்கியிருக்கவேண்டியிருந்தது. அதையும் பயத்துடனே தான் சமாளிக்கவேண்டியிருந்தது"

வேலைக்குச்சென்றதும் சிலவேளை அங்கேயும் தொந்தரவுகள் தொடர்ந்தன. வேலைத்தளங்களில் தங்கள் பெண் சகாக்களைத் துன்புறுத்தி அதனால் இன்பம் காணும் பல ஆண்கள் இருந்ததாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பலர் தெரிவித்தனர். எந்தவிதத் தண்டனைகளுமின்றி அந்த ஆண்கள் இவற்றை செய்து வரக்கூடியதாக இருக்க ஒன்றில் அவர்கள் சிரேஷ்ட பதவிகளில் இருந்தனர், அல்லது அவர்களைத் தப்புவிக்கக்கூடிய முக்கிய பதவிகளில் உள்ள வேறு ஆண்களுடன் அவர்கள் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தனர். "இவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் காப்பாற்றப்படும்போது அது மற்ற ஊழியர்களையும் ஆபத்துக்குள்ளாக்குவதாக அமையும்" என்கிறார் இன்னொருவர். 

இதற்கான தீர்வு மிகத் தெளிவானது.70%மான பதிலளித்தவர்கள் தொழில் தருனர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு எந்தவிதத்திலும் விட்டுக்கொடுப்பை வழங்காத இறுக்கமான கொள்கைகள் கொண்ட ஒரு வரவேற்பு சூழ்நிலை கொண்ட பணியிடங்கள் அமைவது அவ்விஷயம் என்று கூறினர். "எமக்கு வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் வீதிகளிலும் கூட பாலியல் தொந்தரவுகளுக்கு எந்தவிதமான சகிப்புத்தன்மையுமற்ற நேர்த்தியான அர்ப்பணிப்பை வழங்கக்கூடிய சட்ட அமைப்பு முக்கியமானது."

முன்னோக்கிச் செல்லுதல்

இலங்கையிலுள்ள உலக வங்கியானது இலங்கையின் தொழிற்துறையில் மேலும் அதிகமான பெண்களின் பங்களிப்பையும் இருப்பையும் காண்பதற்கான மாற்றங்களை ஊக்குவிப்பதற்காக உறுதிபூண்டுள்ளது.அரச மற்றும் தனியார் துறைகளிலுள்ள எமது பங்காளர்களுடனும் அத்துடன் சிவில் சமூகக் குழுக்களோடும் சேர்ந்து ஒன்றுபட்டு இம்மாற்றத்துக்காக உறுதிபட வாதாடுவதற்காக அர்ப்பணித்துள்ளோம்.நாம் இந்த நிகழ்ச்சித்திட்டமானது தகுந்த அறிவு, வளங்கள் மற்றும் எமது பல பங்காளர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலமாக அறிவிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறோம்.இலங்கையிலே முன்னேற்றத்துக்கான அழுத்தத்தை ஏற்படுத்தத் தயாராகவுள்ள பல பங்குதாரர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்கள் மூலமாக ஒரு பொதுவான தளத்தை ஏற்படுத்த விழைகிறோம்.

இலங்கைப்பெண்கள் தமக்கான இடத்தைத் தொழிலிடங்களில் பெற்றுக்கொள்வதற்கான தடங்கல்களை ஏற்படுத்தும் சவால்கள் இருப்பதை இந்தப் பொதுக் கருத்துக் கணிப்பு உறுதிப்படுத்துகிறது.இதைப் பேச்சிலிருந்து செயன்முறைக்கு முன்நகர்த்துவதற்கு ஏதுவாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களான பங்குதாரர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளைக் கண்காணிப்பதற்கு ஒரு பொதுவான நெறிமுறைத்தளம் ஒன்றை உருவாக்குவதற்கு எண்ணம் கொண்டுள்ளோம். இது பொதுவான தளம் ஒன்றில் உங்கள் பார்வைக்காகவும் வெளிப்படையாக இருக்கும். இந்த முன்னெடுப்பைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளக் காத்திருங்கள். எமது முயற்சிகளில் பங்கெடுக்க நீங்களும் விரும்பினால், அல்லது உங்கள் நேரத்தை நீங்கள் இதில் ஈடுபடுத்த விரும்பினால் infosrilanka@worldbank.org க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள்.

 இலங்கையில் பெண் தொழிலாளர்களின் பங்குபற்றுதலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள : Getting to Work: Unlocking Women's Potential in Sri Lanka's Labour Force

 

*இந்தத் தகவல் குறிப்புக்கள் அனைத்தும் பெண்களின் தொழில்கள் பற்றிய பொது மக்கள் கருத்தை அறிந்துகொள்ள நடத்தப்பட்ட இணையவழிக் கருத்துக்கணிப்பை அடிப்படையாகக் கொண்டவை.இந்தக் கருத்துக் கணிப்பு உலக வங்கியின் வழமையான செயன்முறை மற்றும் நடைமுறைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.



Api
Api