Skip to Main Navigation
பேச்சுக்கள் & எழுத்துப்படிவங்கள் மார்ச் 8, 2018

அடுத்தது என்ன என்பதைத் தீர்மானியுங்கள் - இளம் மகளிரை STEMஐத் தெரிவு செய்வதை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்

கனவான்களே சீமாட்டிகளே , மதிப்பார்ந்த அதிதிகளே, தாய்மாரே மற்றும் என் அன்புக்குரிய பெண்களே.

நான் இலங்கையில் மகளிர் தினத்தைக் கொண்டாடும் இரண்டாவது வருடம் இது. ஒவ்வொரு வருடத்திலும் இப்படியான மகளிர் தின நிகழ்வுகளில் பங்குபற்றும் பல அழைப்புக்கள் உலக வங்கிக்குக் கிடைத்தாலும், இம்முறை தாய்மாரையும் அவர் தம் புதல்வியரையும் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் என்றவுடன் உடனடியாகவே இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொண்டேன். இந்த அழைப்புக்கும் இலங்கையின் எதிர்காலத்தைத் தம் வசம் வைத்துள்ள அற்புதமான இளையோர் இவர்கள் முன் உரையாற்ற வாய்ப்பையும் நல்கிய மைக்ரோசொப்ட் குழுவுக்கு என் நன்றிகள்.

இரண்டு பெண்களின் தாயாராக நான் உங்கள் முன் நிற்கிறேன்; ஒருவர் பல்கலைக்கழகத்தில் கற்கிறார், இன்னொருவர் பல்கலைக்கழகம் செல்லத் தயாராகிறார். என் மகள்மாரும் உங்களைப் போலவே தான் - அவர்களும் விஞ்ஞானத்திலும் தொழிநுட்பத்திலும் தங்களது எதிர்காலத்தை உருவாக்கும் கனவோடு இருக்கிறார்கள். அதேபோல நான், இங்கே அமர்ந்திருக்கும் அனேக தாய்மார் போல கவலைப்பட ஆரம்பித்துள்ளேன்.

அவள் பாதுகாப்பாக இருப்பாளா? பல்கலைக்கழகத்தை விரும்புவாளா? வீட்டுக்கு அழைத்துப் பேச நினைவுகொள்வாளா? விடுமுறைக்கு வீட்டுக்கு வருவாளா? ஆனால் இந்தக் கேள்விகளிருந்தும் அவள் பல்கலைக்கழகம் போகவேண்டுமா என்ற கேள்வி என் மனதில் ஒருதரமேனும் வருவதில்லை. இதற்காகத் தான் நாமும் அவளும் கடந்த 18 வருடங்களாக உழைத்து வந்திருந்தோம். இப்போது பல்கலைக்கழகம் சென்று ஒரு செயற்றிறன் மிக்க பெண்ணாக உருவாகி, பாடசாலைக் கல்வியின் பின்னரான தொழிலாண்மையில் தன்னை ஈடுபடுத்தவேண்டிய அவளது முறை.

இங்கே இருக்கும் ஒவ்வொரு தாயையும் போல, எனக்கும் என்னுடைய மகள்கள் வாழ்க்கையில் உயர்வுகாணவேண்டும் என்ற கனவு இருக்கிறது. பெற்றோராக எம் பிள்ளைகள் பிறந்த நாள் முதல் அவர்களுக்கான வழிகாட்டும் முன்மாதிரிகளாக வாழவேண்டிய தலையாய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது எதிர்காலத்தைக் காக்கவேண்டிய பொறுப்பும் கூட. இது தந்தையருக்குமானது. எனினும் இன்றைய நாள் மகள்மாருக்கும் அவர்களது தாய்மாருக்குமானது.

தமது வாழ்க்கையிலும் தொழிலும் வெற்றிகண்ட பெண்கள், குறிப்பாக விஞ்ஞானம் சார்ந்த தொழிற்துறையில் வெற்றி கண்டவர்கள் அவ்வாறு வெற்றிபெற்ற ரகசியமானது விஞ்ஞானம் மீது அவர்கள் கொண்ட பற்றினாலும், கடும் உழைப்பினாலும் சுய ஒழுக்கத்தினாலும் ஆன்ம சக்தியினாலுமே ஆகும்.

என்னுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை என்னுடைய பெற்றோர் இல்லாவிடில், இது சாத்தியமாயிராது. என் அம்மா எப்போதுமே வெற்றி என்பது முயற்சித்துப் பெறவேண்டியது என்று நினைவூட்டுவார். அம்மா தருகின்ற அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு ஆறுதல் காரணியாக என்னுடைய தந்தையார் விளங்கினார்.ஆனால் என்னுடைய மிகச் சிறந்ததை வழங்கவேண்டும் என்பதில் நான் மிக உறுதியாகவிருந்தேன். எனக்கு இன்னும் ஊக்குவிக்கும் வழிகாட்டிகள் இருந்தார்கள். 

எனவே, இப்போது உங்கள் முன்னால் ஒரு உற்சாகமூட்டும் பெண்ணாக, பெற்ற அறிவைப் பகிர்ந்துகொள்ளும் ஒருவராக, ஒரு வழிகாட்டியாக நிற்கிறேன். சிலவேளை இடையிடையே என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டாலும் அவை சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடவே. இந்த மாலைவேளை முற்றுமுழுதாக இளம் பெண்களான உங்களைப் பற்றியதே. இது கொண்டாடபடவேண்டியதும் இங்குள்ள இளம் பெண்களான நீங்கள் விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் - STEM ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்களைக் கடைக்கொள்வதை ஊக்குவிப்பதைப் பற்றியதுமாகும். நான் அடிக்கடி பெண்களுக்கு சொல்லும் ஒரு விடயம், இந்தப் பாடங்களில் கெட்டிக்காரர்களாக இல்லாவிட்டாலும் இவற்றை நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்துகிறீர்கள் என்று. சுப்பர் மார்க்கெட்டில் காசாளரிடம் பணம் செலுத்தும்போது உடனடியாக எங்களுக்குக் கிடைக்கவேண்டிய மீதிப்பணம் பற்றி சிந்திக்கும் இடத்தில் STEM (விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) சிந்தனை அது. ஒரு வைத்தியர் எமக்கு சில மருந்துகளைப் பற்றி சொல்லுமிடத்தில் யாராவது ஒருவர் இணையத்தில் தேடி ஆராய்ந்து அவற்றுள் அடங்கியுள்ள மூலப் பொருட்கள் என்னவென்று ஆராயும்போது - STEM (விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) சிந்தனை அது. 

விமர்சனப் பாங்கிலான சிந்தனையும் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற இயல்புமே STEMஇன் அடிப்படையாகும். இயல்பாகவே நாம் அனைவருமே ஒரு அளவுக்கு விஞ்ஞானிகள், தொழிநுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் ஆகவே இருப்பதாக நான் எண்ணுகிறேன். இங்கேயிருக்கும் இளம் பெண்கள் அனைவரையுமே சிறப்பாகக் காட்டும் ஒரு முக்கியமான விடயம் நீங்கள் எல்லாருமே STEMஇனை உயர்நிலையில் பின்பற்றுவதற்கு முடிவெடுத்துள்ளமையாகும்.

 இருபது வருடங்களுக்கு முதல் யார் தான் நினைத்திருப்பார்கள், தொழிநுட்பம் இப்போது இருப்பது போல முன்னேறியிருக்கும் என்று? தொலைபேசியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். யார் நினைத்திருப்பார்கள், உங்கள் அண்டை அயலவர் வெட்கமில்லாமல் ஒட்டுக்கேட்ட ஒரு சாதனமாக, பலர் ஒன்றாகப் பகிர்ந்த அழைப்புக் கருவியாக ஆரம்பித்த தொலைபேசி இப்போது இப்படி மாறி நிற்கும் என்று? புத்தாயிரம் ஆண்டின் புதல்வியரான உங்களில் பலருக்கு அது என்னேவென்றே தெரியாது என்பதை நான் அறிவேன். சுவரில் பதிக்கப்பட்ட தொலைபேசி இப்போது உங்கள் குடும்பத்தினரையும் நண்பரையும் குரல் வழிக் கட்டளைகள் மூலம் இணைக்கும் ஒரு சிறு பெட்டியாக பரிணமித்துள்ளது. இந்தச் சிறுபெட்டி இப்போது உலகத்தின் எந்தத் தொலைதூர மூலையில், அது நீங்கள் இதுவரையில் சென்றேயிராத இடமாக இருந்தாலும், இனிமேலும் செல்லப்போகாத இடமாக இருந்தாலும் உடனே உங்களுக்கான செய்தியை உடனுக்குடன் தருகிறது. யாரோ ஒருவர் கனவு கண்டதாலேயே இது சாத்தியமானது; யாரோ ஒருவர் இதற்கான பேராவலுடன் முயற்சித்ததனாலேயே இது சாத்தியமானது. சில தோல்விகள் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.

இளம் மகளிரே, நீங்களே எதிர்காலத்தின் தீர்க்கதரிசிகள். உங்களுக்கு வேறு விதமாக யாரும் ஏதும் சொல்லிட இடமளிக்காதீர்கள். உங்களது கற்பனாசக்தி, விமர்சனப்பார்வையுடன் கூடிய சிந்தனை, தேடலுடன் கூடிய ஆர்வம் ஆகியவற்றை பரந்துவிடுங்கள். இவை மூலம் நீங்கள் சாதிக்கக்கூடியவை உங்களை ஆச்சரியப்படுத்தலாம். மாரி க்யூரி கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த நேரம் எதிர்காலத்தில் தனது கண்டுபிடிப்பின் மூலமாக மருத்துவ உலகிலும் மக்கள் வாழ்க்கையிலும் ஏற்படுத்தவுள்ள மிகப்பெரிய தாக்கங்கள் பற்றி நினைத்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்.

நான் ஏற்கெனவே சொன்னது போல, என்னுடைய மகள்மார் தங்கள் எதிர்காலமாக விஞ்ஞானத்தைத் தெரிவு செய்து, மருத்துவம் மற்றும் நரம்பியலைக் கற்க விரும்பியுள்ளனர். எனது கணவரும் நானும், இருவருமே விஞ்ஞானப் பின்னணியுடையவராக இருந்ததால் எங்கள் பிள்ளைகளை வெளியுலகில் அறிமுகப்படுத்த விரும்பியிருந்தோம். எவ்வாறு விமர்சனப் பாங்கோடு சிந்திப்பது என்பதைப் பற்றி அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பினோம். குடும்பச் சுற்றுலாக்கள் செல்லும்போது தாவரவியல் பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று மயிர்கொட்டிகள் எவ்வாறு வண்ணத்துப்பூச்சிகளாக உருமாறுகின்றன என்று பார்க்க வழி செய்தோம். ரயில் பயணங்களில் சென்றோம்; அதன்மூலம் ரயில் சக்கரங்களுக்கும் தண்டவாளங்களுக்கும் இடையிலான தொடர்பு மூலமாக எவ்வாறு அவை இயங்குகின்றன என்று அவர்கள் அறிந்துகொள்வதற்காக.

இந்த உலகம் விஞ்ஞானத்தில் தான் இயங்குகிறது என்பதை அவர்களுக்குக் காண்பிக்க விரும்பினோம். இந்த சபையில் கூடியுள்ள பெற்றோராகிய நீங்களும் இங்கேயுள்ள உங்கள் மகள்களுக்கான உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பாதைகளை அவர்களுக்கான ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும், அறிமுகப்படுத்தும் விதமாகவும் வகுத்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இலங்கையைப் பொறுத்தவரை, ஆண்களை விட அதிகமாகப் பெண்களே உயர்கல்வியில் ஈடுபடுகின்றனர். ஆனால் எண்ணிக்கையின் அடிப்படையில் STEM பாடங்களை போதுமானளவு எடுப்பதில்லை என்று தெரிகிறது. அதேபோல தொழில்களிலும் குறைந்தளவு பெண்களே உள்ளனர். இன்னொரு பக்கம் ஆயுள் எதிர்பார்ப்புக் காலம் பெண்களுக்கு 78 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் அதிகரித்துள்ளது. இனி வரும் தசாப்தங்களில் இலங்கையின் பெருமளவிலான சனத்தொகை அறுபது வயதைத் தாண்டியதாக இருக்கப்போகிறது. பணக்காரராக முதலாகவே வயதாகிறது இலங்கை. இப்படியான மக்கள்தொகை வளர்ச்சியானது இலங்கை மக்களின் குடும்ப வாழ்க்கை முறையையும் தொழில்சார் உழைப்பு சக்தியாகப் பெண்கள் வகிக்கும் பங்கிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

இப்படியான நடைமுறையானது முறையாக அனுகப்படாவிட்டால், வயது முதிர்ந்தோர் தங்கள் முதுமையிலே ஏழ்மையில் அவதிப்படுவதொடு, அவர்களது சேமிப்பும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும். இந்த வயதாகும் பாங்கு இலங்கைக்கு மட்டும் உரித்தானதல்ல, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் வயதேறும் போக்கோடு ஒப்பிடுகையில் பிறப்பு வீதம் குறைவாகவேயுள்ளது. இதனை ஈடுகட்டும் விதமாக அவர்கள் பால் வேறுபாடு இல்லாமல் தங்கள் மக்களைத் தேர்ச்சியுடையோராக மாற்றுவதோடு தொழிநுட்பத்திலும் முதலிடுகிறார்கள். இந்தப் பயணப்பாதையே இலங்கை எடுக்கவேண்டியுள்ளது.

நீங்கள் தான் இலங்கையின் எதிர்காலம். எனவே எத்துனையளவு உறுதியுடையவர்களாகவும் இலட்சியம் கொண்டோராகவும் நீங்கள் இருக்கிறீர்கள்? இந்த வருடத்தின் மகளிர் தினத் தொனிப் பொருளான முன்னேற்றத்துக்கான அழுத்தத்தை வழங்குதல் என்பது தொடர்பில் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள்?

உலக வங்கியியான நாம் முன்னேற்றத்துக்கான அழுத்தத்தை வழங்குதல்  என்பது தொடர்பில் மிக சிரத்தையான அக்கறையுடன் ஈடுபட விரும்புகிறோம். பெண்களை மேலும் அதிகளவில் பாதுகாப்பானதும் நியாயமானதுமான ஊழியத்தில் ஈடுபடுவதைப் பார்க்க ஆசைப்படுகிறோம். உங்களையும் வரவேற்கிறோம்.மைக்ரோசொப்ட் போன்ற பாடசாலைகளிலேயே டிஜிட்டல் கற்றல் தளங்களில்ஈடுபட வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களைப் பாராட்டுகிறோம். பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் smart school concept மூலம்  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் எவ்வாறு பாடசாலைகளுக்கு மிக உபயோகமாகவுள்ளது என்பதை மிக ஆர்வத்துடன் வாசித்தேன். இன்றைய காலகட்டத்தில், தொழிநுட்பம் மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் பெற்றோர்மற்றும் ஆசிரியரின் வகிபாகம் மாறிக்கொண்டு வருகிறது. எங்கள் குழந்தைகளுக்கு நாம் வகுப்பில் எல்லாவற்றையும் கற்றுத்தர முடியாது, ஆனால் அவர்களே தமக்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொள்ளவும் தம்மை மேம்படுத்திக்கொள்ளவும் உரிய திறன்களையும் அவற்றுக்கான கருவிகளையும் வழங்கலாம். மாணவர்களாக, ஆசிரியர்களாக, பெற்றோராக, பாடசாலை சமூகமாக நாம் பொறுப்பேற்றுக்கொள்ளவும், மாற்றமொன்றை ஏற்படுத்தவும் கூடிய ஒரு நிலையில் இது உள்ளது.

எங்களது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியான "உங்களது முன்மாதிரி யார்?" என்பதில் நீங்கள் அனைவரும் பங்குபற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். அது உங்கள் அம்மாவாகவோ, உங்கள் ஆசிரியையாகவோ, உங்கள் வாழ்க்கையில் ஈர்ப்பை ஏற்படுத்திய ஒருவராகவோ, வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவதற்கான ஆர்வத்தை ஊட்டிய ஒருவராகவோ இருக்கலாம்.

இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் ,மைக்ரோசொப்ட் நிறுவனத்தாருக்கு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து முன்னேற்றத்துக்கான அழுத்தத்தை வழங்குதல் என்பது தொடர்பில் பங்களிப்பையும் வழங்கியமைக்கு நன்றியையும் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்துகொள்ள விரும்புகிறேன். இங்கே வீற்றுள்ள அற்புதமான இளம் பெண்கள் மற்றும் அவர்களது தாய்மாருக்கு இங்கே வருகை தந்ததற்காக மட்டுமன்றி இந்த நிகழ்வை அர்த்தப்படுதியதற்கும் விசேட நன்றிகள். பெண்களின் ஒரு கொண்டாட்டமே STEM.

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

நன்றி. 

Api
Api