Skip to Main Navigation
செய்தி வெளியீடுநவம்பர் 1, 2023

இலங்கைக்கு விஜயம் செய்த உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர், சீர்திருத்தங்களைத் தொடர்தல் மற்றும் மக்களில் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்

கொழும்பு, நவம்பர் 1, 2023 – இலங்கைக்கான தனது நான்கு நாள் விஜயத்தை இன்று முடித்துக்கொண்ட உலக வங்கியின் செயற்பாடுகளுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியடேய், இலங்கை அரசாங்கம் பொருளாதார மீட்சி மற்றும் பேண்தகு வளர்ச்சிக்காகச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களில் முதலீடு செய்வதற்கும் மனித  மூலதனத்தை வலுப்படுத்துவதற்கும், தொழில்களை உருவாக்குவதற்கும் உலக வங்கியின் தொடர்ச்சியான உதவி வழங்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அனா பியடேய் தனது விஜயத்தின்போது இலங்கையின் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோரையும் எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், தனியார் துறை மற்றும் அபிவிருத்திப் பங்காளி அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உலக வங்கி செயற்திட்டங்களின் பயனாளிகளையும் சந்தித்தார்.

அவர் ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட ஒரு வட்டமேசை மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் முக்கிய அமைச்சர்கள், தனியார் துறைப் பிரதிநிதிகள் ஆகியோரும் பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகள் (MDBs)  மற்றும் இருதரப்பு அபிவிருத்திப் பங்காளிகளை உள்ளடக்கும் MDB+ தளத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட அபிவிருத்திப் பங்காளிகளும் இதில் பங்குபற்றினர். MDB+ தளம் என்பது அதன் அங்கத்துவ நிறுவனங்கள் இலங்கையுடனான ஈடுபாடுகளை ஒருங்கிணைப்பதற்கு உதவுகின்ற ஓர் அமைப்பாகும். கட்டமைப்புச் சீா்திருத்தங்களின் முன்னேற்றம், அபிவிருத்திக்காகத் தனியார் மூலதனத்தைத் திரட்டுதல், தொழில்களின் உருவாக்கத்திற்கு உதவுதல், மனித மூலதன அபிவிருத்தி, பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் வட்டமேசை மாநாடு கவனம் செலுத்தியது.

“அழிவுகரமான பாதிப்புகளை ஏற்படுத்திய முன்னொருபோதும் இல்லாத அதிர்ச்சிகளில் இருந்து இலங்கை மீட்சி பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பொருளாதாரத்தை உறுதிநிலைப்படுத்தி முதலீடுகளைக் கவரும் விதத்தில் அதன் வளா்ச்சியை ஊக்குவிக்கவும் தொழில்களை உருவாக்கவும் மிக வறிய மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும் எதிர்கால நெருக்கடிகளுக்கான தாங்குதிறனைக் கட்டியெழுப்பவும் உறுதியான மற்றும் காலந்தாழ்த்தாத சீர்திருத்தங்களை நாடு தொடர்ந்து அமுல்செய்ய வேண்டும். அதே சமயம்  அனைவரையும் உள்ளக்கிய வளர்ச்சிக்கு வலுப்படுத்தப்பட்ட ஆளுகை, மக்களின் ஈடுபாடு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு  ஆகியனவற்றுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்று அனா பியடேய் கூறினார்.

மேலும் அவர் இந்த விஜயத்தின்போது, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் விவசாயம், சுகாதாரம். காலநிலை மாற்றம். தனியார் துறை அபிவிருத்தி, பெண்களை நிதி ரீதியாக உள்ளடக்குதல் என்பன தொடா்பாக உலக வங்கியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டார்.

“இலங்கை முகங்கொடுக்கும் சவால்கள் பற்றி நான் எனது விஜயத்தின்போது அறிந்துகொண்டேன். தகைமை பெற்ற தொழில் நிபுணர்கள் நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர். காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். முதலீடுகள் மற்றும் கடன் வசதிகளின் பற்றாக்குறையினால் தொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதே சமயத்தில் காலநிலைக்கு ஈடுகொடுக்கும் விவசாய முறைகளை அதிகரித்தல் (Climate-smart agriculture), புதுப்பிக்கக்கூடிய சக்தியைப் பயன்படுத்துதல், தொழில் முயற்சியாண்மையை     மேம்படுத்துதல், போட்டித்தன்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை  ஊக்குவித்தல், மக்களின் பங்கேற்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதையும் நான் கண்டுகொண்டேன் என்று குறிப்பிட்ட அனா பியடேய் , “இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணத்தில் உதவுவதற்கும்,   விவசாயிகளைச் சந்தைகளுடன் தொடர்புபடுத்தவும், சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளைப் பலப்படுத்தவும், புத்துருவாக்கத்தை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு முதலீடுகளுடாக மாற்றத்தை ஏற்படுத்தவும், சிறந்த தொழில் வாய்ப்புகளை பெண்கள், இளைஞர்களுக்காக  உருவாக்கவும் உலக வங்கி தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி செய்யும்” என்று தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் பங்காளியாக இருந்துவரும் உலக வங்கி, நிதி மற்றும் அறிவுசார் உதவிகளை வழங்கிவருகின்றது.

2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த வேளையில், முக்கியமாக வறியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவா்கள் உள்ளிட்ட இலங்கை மக்களை நெருக்கடியின் கடுமையான தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக உலக வங்கி ஏற்கனவே நடைமுறையிலிருந்த அதன் திட்டங்களிலிருந்து நிதியை ஒதுக்கியது. நெருக்கடிக்கு உதவ முதன்முதலில் முன்வந்த அமைப்புகளில் ஒன்றான உலக வங்கி, இலங்கையில் அடிப்படைச் சேவைகள் மற்றும் பொருள் வழங்கலைப் பேணுவதற்கு அவசர உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பவற்றுடன் இணைந்து ஓர் ஒருங்கிணைப்புத் தளத்தை ஏற்படுத்தியது.   

தொடர்பு

வொஷிங்டனில்
டயனா சங்
கொழும்பில்
புத்தி பிலிக்ஸ்கே

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image