Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை ஜனவரி 15, 2021

பரிசோதித்தல், கண்டுபிடித்தல், சிகிச்சையளித்தல் - இலங்கையின் தொற்றுநோய் முகாமைத்துவ மந்திரத்தை நடைமுறைப்படுத்தல்

Image

Sri Lanka's wide network of public health workers has been the backbone of the country's COVID response.

Photo Credit - Ruwan Walpola / Shutterstock


கதை சிறப்புக்கூறுகள்

  • இலங்கையின் பரிசோதித்தல், கண்டுபிடித்தல், சிகிச்சையளித்தல் தொற்றுநோய் முகாமைத்துவ மூலோபாயம் நாட்டின் நன்கு நிறுவப்பட்ட பொதுச் சுகாதார முறைமையைப் பெரிதும் நம்பியுள்ளது.
  • கிட்டத்தட்ட ஒரு வருடத்தில், நாடு முழுவதிலுமுள்ள சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுநோய் முகாமைத்துவம் தொடர்பான பெறுமதிமிக்க நுண்ணறிவுகளையும் அனுபவங்களையும் பெற்றுள்ளனர்.
  • ஆரம்பத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இடங்களுள் ஒன்றான புத்தளம் மாவட்டமானது, தொற்றுநோய் முகாமைத்துவத்தில் தனித்துவமான ஆபத்துக் காரணிகள் மற்றும் யதார்த்த நிலைமைகளுக்குப் பிரதிபலிப்புச் செய்துள்ளது.

நாடு முழுவதிலுமான நேரடி அனுபவங்கள்

இலங்கையின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களின் விரிவான வலையமைப்பானது நாட்டின் தொற்றுநோய்ப் பிரதிபலிப்புக்குப் பின்னாலுள்ள அடிப்படை சக்தியாகும். இந்த தொடர்க் கட்டுரைகள், புத்தளம் மாவட்டத்தில் தொடங்கி நாடெங்கிலும் உள்ள பொதுச் சுகாதாரப் பணியாளர்களின் கண்ணோட்டத்தில், தொற்றுநோய் முகாமைத்துவத்தின் யதார்த்த நிலைமைகளைச் சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

புத்தளத்தில் தொற்றுநோய்ப் பரவல்

"கொவிட் 19 நாட்டின் பிற பகுதிகளை அடைவதற்கு முன்பே புத்தளத்தை வந்தடைந்தது" என்று புத்தளத்தின் கொவிட் 19 பிரதிபலிப்பு மூலோபாயத்தின் பிரதான பாத்திரமாகிய சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் துஷானி தப்ரேரா கூறுகிறார்.

வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம், தொற்றுநோய்களின் முழு சக்தியையும் உணர்ந்ததுடன், புத்தளத்திலுள்ள உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அதனை எதிர்த்துப் போராடுவதற்கு முதன்மையாக முன்னணியில் இணைந்தவர்களாவர்.

2007 ஆம் ஆண்டு முதல் புத்தளத்தில் தொற்றுநோயியல் நிபுணராகப் பணியாற்றிய வைத்தியர் தப்ரேரா மாவட்டத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். அவர் அதன் மக்களை, அதன் புவியியலை, அதன் தனித்துவமான பழக்கவழக்கங்களையும் மிகவும் முக்கியமாக அதன் பொதுச் சுகாதார வலையமைப்பையும் நன்கு அறிந்திருந்தார். "இந்தப் பிரதேசத்திலுள்ள சில தனித்துவமான இடர்க் காரணிகளால் புத்தளம் தொற்றுநோய் தொடர்பான சற்று வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றுள்ளது," என்றும் "அதனைச் சமாளிப்பதற்கு, எங்கள் மூலோபாயமும் சற்று வித்தியாசமானதாக இருக்க வேண்டும்" என்றும் வைத்தியர் தப்ரேரா கூறுகிறார்.

இடர் முகாமைத்துவமும் முன்கூட்டிய பிரதிபலிப்பும்

கொவிட் 19 பீதி நாட்டின் பிற பகுதிகளை அடைவதற்கும் உலக சுகாதார நிறுவனமானது (WHO) உலகளாவிய தொற்றுநோய் நிலைமையைப் பிரகடனப்படுத்துவதற்கும் முன்பே, 2020 சனவரி மாதம் புத்தளம் தனது தொற்றுநோய் பிரதிபலிப்பினைத் தொடங்கியது. சனவரி மாதம் 15 ஆம் திகதி சீனப் பொறியியலாளர்கள் குழுவொன்று, சீனாவில் புத்தாண்டைக் கழித்த பின்னர், புத்தளத்தில்  தமது பணிக்குத் திரும்பியது.

அந்த நேரத்தில், இலங்கை பெரிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருக்காததுடன் தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனை வசதிகள் அதுவரை நிறுவப்பட்டிருக்கவில்லை. அவர்கள் எந்தவொரு அறிகுறிகளையும் காட்டாத போதிலும், திரும்பிவருபவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமும்  இப்பகுதியில் சிறிய அளவிலான முகாமைத்துவ மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்தனர். மருத்துவமனைகளில் அத்தியாவசிய ஏற்பாடுகள் இருந்ததுடன் கொவிட் 19 அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்துப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெப்ரவரி மாதத்திற்குள், இரண்டாவது இடர்க் காரணி அடையாளம் காணப்பட்டது. பொதுவாக ‘சிறிய இத்தாலி’ என்று அழைக்கப்படும் வென்னப்புவ நகரமானது  இத்தாலியில் பணிபுரியும் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களைக் கொண்டுள்ளதுடன் இத்தாலியில் தொற்றுநோய் உச்சத்தை எட்டியதால், பல இலங்கையர்கள் புத்தளத்திலுள்ள தமது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 2,500 - 3,000 பேர் இத்தாலியில் இருந்து புத்தளத்திற்குத் திரும்பியதுடன் அவர்களில் பலருக்கு கொவிட்-19 அறிகுறிகள் இருந்தன. வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றாலும், நிலைமையின் தீவிரம் அதுவரை புரிந்து கொள்ளப்படாததால் தனிமைப்படுத்தலைச் செயற்படுத்துவது ஒரு போராட்டமாகவிருந்தது.

பொதுவாக சுமார் 200,000 மக்களை ஒன்றுசேர்க்கும் வருடாந்த தலவில தேவாலய உற்சவம் மூலம் நிலைமை மோசமடைந்தது.  "நாங்கள் 10 - 20 ஏக்கர் பரப்பளவிலுள்ள சுமார் 100,000 மக்கள் தொகையைப் பற்றி பேசுகிறோம். தனிமைப்படுத்தல் சட்டம் அதுவரை வர்த்தமானியில் வெளியிடப்படாததால், இந்தக் காலகட்டத்தில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்துவது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது” என்று வைத்தியர் தப்ரேரா விளக்குகிறார்.

புத்தளத்தில், அந்த நேரத்தில், அர்ப்பணிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வசதி காணப்படாததுடன் மாவட்டத்தில் காணப்படக் கூடிய அதிக எண்ணிக்கையான நோயாளர்களின் சுமையானது, மருத்துவமனையின் இயல்திறனை  விஞ்சும் என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே உணர்ந்தனர். தனிப்பட்ட தனிமைப்படுத்தல் வசதியின் அவசியத்தை உணர்ந்த மாவட்ட அதிகாரிகள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ள 540 ஏக்கர் பரப்பளவு கொண்ட பயன்படுத்தப்படாத சொத்தொன்றை அடையாளம் கண்டனர். மார்ச் மாதத்தில் தனிமைப்படுத்தல்  கட்டளைச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட சொத்தானது 20 நாட்களுக்குள் இரணவில மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

மார்ச் 14 ஆம் திகதி முதலாவது கொவிட் 19 தொற்று மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. தொற்றுக் காணப்பட்டவருடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டதுடன் மார்ச் 18 ஆம் திகதி இப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளைப் போலவே புத்தளத்திலும் உள்ளூர் சமூகங்கள் தம்மால் இயன்ற சகல வழிகளிலும் அதிகாரிகளுக்கு  ஆதரவு வழங்கின. “எங்களிடம் போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதபோது, ​​மக்கள் ஒன்றிணைந்து, மூலப்பொருட்களைத் திரட்டி, வீட்டில் முகமூடிகளைத் தைத்தார்கள். விகாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாயில்கள், கோவில்கள் போன்றவற்றில் மதத் தலைவர்கள் அனைவரும் முகமூடிகளை உருவாக்கினர் ”என்கிறார் வைத்தியர் தப்ரேரா.

மார்ச் மாத இறுதிக்குள், மாவட்டம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களில் முழுமையாக தன்னிறைவு பெற்றதுடன்  பாதிக்கப்படக்கூடிய வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறுகிறார். "எல்லோருக்கும் ஒரு பங்கு இருந்தது - அரசியல் அதிகாரிகள், காவல்துறை, ஆயுதப்படைகள், மதத் தலைவர்கள், வணிக சமூகம், சிவில் சமூக அமைப்புகள் , நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகப் பணியாற்றியதுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினூஷா பெர்னான்டோ, பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் உதானி அதிகாரி   மற்றும் மாவட்ட செயலாளர் திரு சந்திரசிறி பண்டார ஆகியோரிடமிருந்து எங்களுக்குச் சிறந்த தலைமைத்துவம் கிடைத்தது. ஆலோசனை, சிறந்த தலைமைத்துவம் மற்றும் உறுதியான மற்றும் சரியான நேரத்தில் தீர்மானமெடுத்தல் ஆகியன இந்தச் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தன,” என்று வைத்தியர் தப்ரேரா கூறுகின்றார்.


Image

Dr. Thushani Dabrera conducting an awareness session for public sector officials at the Divisional Secretariat Office in Wanathawiluwa.

Photo credit: Dr. Dinej Chandrasiri


இரண்டாவது அலைக்கு முகங்கொடுத்தல்

ஒக்டோபர் மாதத்திலிருந்து, அயல் மாவட்டமாகிய கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைக் கொத்தணி மற்றும் பேலியகொடை மீன் சந்தைக் கொத்தணி ஆகியவற்றைச் சுற்றியுள்ள இரண்டாவது அலை தொற்றினால் புத்தளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் புத்தளத்திலிருந்து வேலைக்குச் செல்வதாலும் இப்பகுதியில் உள்ள மீனவர்களுக்குப் பேலியகொடை மீன் சந்தையுடன் நெருங்கிய தொடர்புள்ளதாலும் மக்கள் இரு மாவட்டங்களுக்கிடையிலும் அடிக்கடி நகருகின்றனர். தொடர்புத் தடமறிதல் ஓரளவிற்கு பரவலைக் கட்டுப்படுத்த உதவியது என்றாலும், மாவட்டத்தில் பல பகுதிகளைத் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருந்தது.

இரண்டாவது அலையை நிர்வகிப்பது ஒரு சவாலாக உள்ளதுடன்  வைத்தியர் தப்ரேரா இப்போது மூலோபாயத்தில் சில சிக்கல்களைக் காண்கிறார். என்று அவர் கூறுகிறார். சோதனைச் செயல்முறையை ஒருங்கிணைக்கச் செலவழிக்கும் நேரமும் முயற்சியும் வடமேல் மாகாணத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு ஒரு பிரத்தியேக ஆய்வகம் இல்லாததால் அதிகரிக்கின்றமை பற்றி விளக்கும் போது, "ஆய்வகங்கள் அதிக பளுவுடன் காணப்படுவதுடன் பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்க எந்த முறைமையும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

தொற்றுநோயின் இரண்டாவது அலை பற்றிக் கருத்திற்கொள்ளும் போது, வைத்தியர் தப்ரேரா மீளாய்வு மற்றும் மீள்மதிப்பீட்டின் அவசியத்தைக் காண்கிறார். "நாம் மீளாய்வு செய்து, எங்கு சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். முன்னோக்கி நகரும்போது, ​​ஒரு திட்டத்தை தயாரிப்பதில் அனைத்து துறைகளும் ஈடுபட வேண்டும். நடைமுறைப்படுத்தல் தரமானதாக இல்லாவிட்டால் வெறுமனே வழிகாட்டுதல்கள் மட்டும் உதவாது,” என்று அவர் கூறுகிறார்.

முறையியல் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தொற்றுநோய்களின் போக்கானது பொது நடத்தை மூலம் தீர்மானிக்கப்படும். "எமது பொருளாதாரத்தை பராமரிப்பதற்கு நாட்டைத் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும், ஆனால் மக்கள் தங்கள் நகர்வுகளை மட்டுப்படுத்தாவிட்டால் இதை நாங்கள் செய்ய முடியாது. உத்தியோகபூர்வ ஊரடங்கு உத்தரவு இல்லாவிட்டாலும் ஊடரங்கு இருப்பதைப் போல எண்ணி நாங்கள் செயற்பட வேண்டும்,” என்று வைத்தியர் தப்ரேரா  கூறுகின்றார்.

உலக வங்கியின் நிதியளிக்கப்பட்ட கொவிட் - 19 அவசரகால பிரதிபலிப்பு மற்றும் சுகாதார முறைமைகள் தயார்நிலைத் திட்டம் இலங்கையின் பரிசோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சையளித்தல் மூலோபாயத்தை ஆதரிக்கிறது. நாட்டின் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், பரிசோதனைக் கருவிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் பங்களிப்பு செய்வதுடன் அதற்கு மேலதிகமாக, இந்தத் திட்டமானது தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு உதவுவடன் நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் நிலையங்களைப் பராமரிக்கிறது. தொற்றுநோய்த் தயார்நிலையைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் நாட்டின் அவசரகால பதிலளிப்பு இயல்திறனை வலுப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. தேசிய அவசரகால செயல்பாட்டு பிரிவு மற்றும் அதன் நாடு முழுவதிலும் பரந்த வலையமைப்பை வலுப்படுத்துதல், தேசிய தொற்றுநோயியல் கண்காணிப்பு முறையை வலுப்படுத்துதல், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளை தொற்றுநோய்ப் பிரதிபலிப்பு மையங்களாக அபிவிருத்தி செய்தல் மற்றும் உள்நாட்டு ஆய்வக வலையமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் நடவடிக்கைகள் கவனம் செலுத்துகின்றன. பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலமும், மனநல சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமும், பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகளை வழங்குவதன் மூலமும் தொற்றுநோயின் சில சமூக விளைவுகளுக்கு  இந்த திட்டம் தீர்வு வழங்குகின்றது.



Api
Api