Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை மே 16, 2018

இலங்கை இளம் பராயத்து கல்வியில் முதலிடுவதன் மூலம் நியாயமான சமநிலை வளர்ச்சியை அதிகரிக்க முடியும்


கதை சிறப்புக்கூறுகள்

  • இளம் பராயத்து கல்வியை வழங்குவதன் மூலம் கற்கும் வாய்ப்புக்களில் சமநிலையை ஏற்படுத்துவதோடு, சமநிலை வளர்ச்சியை முன்னிலைப்படுத்தலாம்.
  • பெற்றோர் இளம் பராயத்து கல்வியின் அனுகூலங்கள் பற்றியும், அதன் மூலம் தங்கள் வீடுகளில் எவ்வாறு ஒரு நிறைவான சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
  • இலங்கையின் பொருளாதாரத்தில் கல்விக்காக செலவிடும் பொதுத் தொகையானது உலகிலேயே மிகக் குறைவானது என்பதோடு அந்த முதலீட்டை அதிகரிக்கவேண்டியுள்ளது.

இன்று, லலானி தமயந்தி பெரேரா ஒரு காகமாக நடிக்கிறார்.சிங்கித்தி கெக்குலு பாலர் பாடசாலை (முன் பள்ளி) மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் ஆசிரியையாக இருக்கும் லலானியும், அவரது (நரி முகமூடி அணிந்துள்ள)உதவியாளரும்,ஐந்து வயதுக்குட்பட்ட 40 குழந்தைகள் உள்ள அந்த நிலையத்தில் ஈசாப் நீதிக்கதை ஒன்றை நடித்துக்காட்டுகின்றனர்.

அந்தக் கதையில் நாரி தனது தந்திரம் மூலமாக காகத்திடமிருந்து வடையை (அல்லது சீஸை) விழவைத்து பறித்தெடுக்கிறது; லலானி காகம் போல கரையும்போது குழந்தைகள் சிரிக்கிறார்கள்.

லலானி, வகுப்பறையில் நாடகங்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்தலாம் என்பதை சிறு பராயக் கல்வி அபிவிருத்தி பயிற்சி ஒன்றில் கற்றுக்கொண்டார். "முன்பு படங்கள் ஒட்டப்பட்ட அட்டைகள் மற்றும் புத்தகங்கங்களைப் பயன்படுத்தியே கதைகளைச் சொல்லிவந்தேன்"என்று சொல்லும் அவர், நடித்துக்காட்டுவதானது சுவையானதும் பெருமளவு பயனுள்ளதாகவும் அமைவதாகத் தெளிவுபடுத்துகிறார். குழந்தைகள் கதைகளை வீட்டிலே மீண்டும் சொல்லக் கூடியதாக இருப்பதோடு , அவர்களது ஞாபகசக்தி முன்னேற்றம் காண்கிறது. "ஒரு மாதத்துக்குப் பின்னர் நாம் கேட்டாலும் ஆசிரியை எவ்வாறு நடித்திருந்தார் என்பதை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள்"

லலானி தன்னுடைய பயிற்சியை தெற்காசியாவுக்கான உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட முதலாவது தனித்த குழந்தைப் பராயத்து அபிவிருத்தி திட்டத்தின்(ECD) மூலமாகப் பெற்றிருந்தார். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ECD நிலையங்களில் எடுக்கப்பட்ட தேசியக் கணக்கெடுப்பின் மூலமாக பிரதானமான சவால்களையும், சிறுவர் அபிவிருத்தி அலுவலர்கள்,ஆசிரியர்கள்,சிறு குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு உடனடியாக வழங்கப்படவேண்டியுள்ள வசதிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பாகவும் அறியப்பட்ட்து.

ECDயை ஊக்குவிப்பதன் மூலம், சமவாய்ப்புக்களை ஊக்குவிக்கலாம்

 குழந்தைகள் முன் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்களா இல்லையா என்பது தன்னைச் சுற்றியுள்ள குடும்பங்களின் சமூக - பொருளாதார நிலைகளில் மிகப்பெரியளவில் தங்கியுள்ளது என்பதை லலானி அறிந்துள்ளார். சில குடும்பங்கள் கட்டணங்களை செலுத்துவதற்கு சிரமப்படுகின்றன. "எங்களது கிராமத்தின் முன்பள்ளியைச் சுற்றியுள்ள குடும்பங்கள் ஏழ்மையானவை" என்கிற லலானி, அதிகமானவர்கள் மேசன்கள், தச்சு வேலை செய்வோர் அல்லது தோட்ட வேலை செய்வோராக தினக்கூலியைப் பெற்றுக்கொள்வோர் என்றும் குறிப்பிடுகிறார்.

 லலானியின் அனுபவங்கள், இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் எல்லாவித சமூக - பொருளாதாரப் பின்னணிகளிலும் வாழும் எல்லாச் சிறுவர்களுக்கும் ECD வசதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் விசேட அக்கறையை இலங்கை செலுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

முன்பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மிக அண்மைய எண்ணிக்கைகளின் படி, செல்வந்த அடிப்படையில் செழிப்பான குடும்பங்களைச் சேர்ந்த 54 சதவீதக் குழந்தைகள் முன்பள்ளிகளில் அனுமதிக்கப்படும் அதேவேளை, மிகத் தாழ்வான செல்வ மட்டம் கொண்ட வீட்டுச் சூழலையுடைய 44 வீதமான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதிகளவு பணக்கார பின்னணி கொண்ட பிரிவிலும் கூட இன்னும் முன்னேற இடமுண்டு என்பது தெளிவு. நகர்ப்புற மற்றும் பெருந்தோட்டப் பிரிவுகளிடையே வேற்றுமையும் பெருமளவில் காணப்படுகிறது. நகரங்களில் 54 வீத சேர்க்கைகளும், பெருந்தோட்டப் பகுதிகளில் 42 வீத சேர்க்கைகளும் இடம்பெற்றிருப்பதாக மிக அண்மைய HIES எனப்படும் இலங்கையின் வீட்டு வருமான மற்றும் செலவீனக் கணிப்பீட்டுத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.


Image

போதுமானளவு இட வசதி, குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியன இப்போது இருக்கின்றன. சுற்றுச் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு ஏற்றனவாக இப்போது அமைக்கப்பட்டுள்ளன.

Photo credit : Viraj Kanishka Madanayake


சில ஆய்வுகளின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள், பணக்காரப் பின்னணி கொண்ட குடும்பங்களின் குழந்தைகளை விட மோசமான அறிவுசார்ந்த வளர்ச்சியைப் பெறக்கூடிய ஆபத்து நிலவுவது உறுதியாகியுள்ளது. ஆரம்ப வளர்ச்சித் தாமதமானது நீண்ட கால மற்றும் எப்போதும் மீள மாற்றமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இந்த விடயத்தில், இளம் பராயத்து கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் கற்றலுக்கான வாய்ப்புக்களின் சமமான நிலைகளையும், சமானமான அபிவிருத்திக்கும் உதவும்.

பயிற்சித் திட்டங்கள் பெற்றோரைக் இலக்காகக் கொள்ள வேண்டும்

ஆசிரியர்களுக்கான பயிற்சிகளின் முக்கியத்துவம் பரந்தளவில் அங்கீகரிக்கப்படும் அதேநேரம், பெற்றோரை தெளிவுபடுத்துவதன் மூலம் இளம்பராயத்து கல்வியின் நன்மைகளை இன்னும் அதிகளவில் அடையலாம். சரியான இலக்குகளுடன் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்கள்,முன்பள்ளிகள் மற்றும் ECD நிலையங்கள் மூலம் கிடைக்கின்ற சேவைகளின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது மட்டுமன்றி, எவ்வாறு வீடுகளில் அவர்கள் தம் குழந்தைகளோடு விளையாடுவது, சிறு பராயத்திலேயே கல்வி கற்கத் தூண்டுவது, மற்றும் போஷாக்கு ஆகியன எவ்வாறு குழந்தைகளில் தாக்கம் செலுத்தும் என்பவற்றை உள்ளடக்கிய வீட்டில் அவர்களது வகிபாகங்களையும் உணரவைக்கும்.

ஜனவரியில் ஆரம்பித்து ஒவ்வொரு வருடத்தினதும் மே மாதம் வரை, இளம் பராயத்து சிறுவர் கல்வி அபிவிருத்தி அலுவலரான சுரஞ்சி உதயங்கனி, பெற்றோர்களின் குழுக்களை ஒன்று சேர்த்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அவர் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று,  இளம் பராயத்து சிறுவர் கல்வியானது ஏட்டுக்கல்வி செயற்பாடாக அல்லாமல், எவ்வாறு அது விளையாட்டை மையப்படுத்திய செயற்பாடுகளாகவும், சமூகமயமாக்கலின் மூலமும் எவ்வாறு பெறுமதி மிக்க நன்மைகளைத் தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றுத்தரலாம் என்பதைப் புரியவைப்பதே.

பெற்றோர் வீட்டிலே செய்யக்கூடிய சின்னச்சின்ன நடவடிக்கைகள், உதாரணமாக குழந்தைகள் வடிவங்களை அறிந்துகொள்ளல், பாடல்களை பழகுதல், காய்கறிகளை அடையாளப்படுத்தல் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள அவர் உதவுகிறார். "பெற்றோர் வீட்டு சூழ்நிலையை குழந்தைகளுக்கு சிநேகபூர்வமானதாக உருவாக்கவேண்டும்" என்கிறார் அவர். "இது வேறு எவராலும் செய்ய முடியாத ஒன்று.பணத்தால் வாங்க முடியாதது. அல்லது பிரத்தியேக வகுப்புக்கு சென்று கற்க முடியாதது".

சிறு குழந்தைகள் அனுபவங்கள் வாயிலாகவே மிகச் சிறப்பாகக் கற்றுக்கொள்கின்றன என்று விளக்குகிறார் சுரஞ்சி. "குழந்தைகள் தாங்கள் பார்ப்பனவற்றிலிருந்து விரைவாகப் பின்பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள், எனவே அவர்கள் குடும்பத்தில் காண்பதும், ஆரம்பக் கல்விச் சூழ்நிலையும் ஆரோக்கியமானவையாக இருக்கவேண்டும்".

இளம்பராயத்துக் கல்வியில் முதலிடுவதை இலங்கை அதிகப்படுத்தவேண்டும்

இளம்பராயத்துக் கல்வியில் முதலிடுவதன் மூலம், பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தை இலங்கை உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். காரணம், இப்படிப்பட்ட இடையீடுகளானவை உயர்வான நன்மை - செலவு விகிதங்களைத் தருவதோடு,மனித வள முதலீடுகளின் மிகச்சிறந்த பிரதிபலன்களையும் வழங்கியுள்ளன. இவ்வாறான நிகழ்ச்சித் திட்ட்ங்களுக்கு யூகம் கொடுத்துள்ள குழந்தைகள், தரப்படுத்தல் பரீட்சைகளில் முன்னேற்றகரமான பெறுபேறுகளைக் காட்டல், பாடசாலைகளில் இருந்து முற்கூட்டியே வெளியேறும் வீதத்தில் வீழ்ச்சி, உயர்ச்சியான பெறுபேற்றை அதிகம் பெறல் போன்ற நல்ல விளைவுகளை வழங்குவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் மீதான அங்கீகாரம் வழங்கல் இலங்கையில் வளர்ச்சி கண்டுவந்தாலும், இந்த அங்கீகாரமானது குறிப்பிடட துறையில் அதிகரித்த முதலீடு மூலம் இன்னமும் ஒப்பிடுமளவு வளரவில்லை. மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளில் இளம் பராயக் கல்விக்கான பொதுச் செலவீனமானது 0.03% (GDPயின் சதவீதத்தில்) . மாறாக இலங்கை தனது மொத்த வெளிநாட்டு உற்பத்தியில் 0.0001 ஐயே  இளம் பராயக் கல்விக்காக செலவழிக்கிறது - இது ECDக்கான உலகளாவிய பொது செலவீடுகளில் மிகக் குறைவானவற்றில் ஒன்றாகும். மேலதிகமாக, பெருமளவிலான சதவீத ECD நிலையங்களில், அடிப்படையான வசதிகளான பாதுகாப்பான குடி நீர் வசதி, முதலுதவிப் பெட்டிகள், கரும்பலகைகள், விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆகியனவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த அத்தியாவசியமானவை வழங்கப்படுமிடத்து குழந்தைகள் விருத்தியடைகிறார்கள்.

இளம் பராயத்துக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக உலக வங்கி லலானியின் பாடசாலையின் விரிவாக்கத்துக்கு அனுசரணை வழங்கியது. ஒரு  விஜயத்தின்போது, அந்தப் பாடசாலை இப்போது மேலதிகமான குழந்தைகளை உள்வாங்கக்கூடியதாகவும், அவசியமாகத் தேவைப்பட்ட கற்றல் உபகரணங்களையும் கொண்டுள்ளதாகவும் சுரஞ்சி சுட்டிக்காட்டினார். "முன்பும் தற்போதும் இந்த இடத்தின் நிலைமையிலான வித்த்யாஸம் மிகத் தெளிவாகத் தென்படுகிறது" என்கிறார் இளம் பராயக் கல்வி அபிவிருத்தி அலுவலர். "போதுமானளவு இட வசதி, குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியன இப்போது இருக்கின்றன. சுற்றுச் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு ஏற்றனவாக இப்போது அமைக்கப்பட்டுள்ளன".



Api
Api