கொழும்பு, 2022 மார்ச் 3 ஆம் திகதி, – இலங்கையின் கடல்சார் மீனவத்துறை, கரையோர நீர்வாழ் உயிரின வளங்கள் மற்றும் அவற்றை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கான முன்னுரிமைகள் என்ற தலைப்பிலான அறிக்கையின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் உயர்மட்ட கொள்கைக் கலந்துரையாடலைக் கூட்டின.
இலங்கையில் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு மீன்வளம் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. இலங்கையர்கள் மீன்களிலிருந்து 50 சதவீத விலங்குப் புரதத்தைப் பெறுகிறார்கள், இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகமானதாகும். கரையோர மற்றும் கடல் மீன்பிடி கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களுக்கு முழு நேர அல்லது பகுதி நேர நேரடி அல்லது மறைமுக வேலைவாய்ப்பை வழங்குவதோடு மேலும் 3.6 மில்லியன் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுகிறது. அதே நேரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் ஏற்றுமதி வருமானம் ஆகியவற்றில் இத்துறையின் பங்களிப்பு மிதமானதாகும். 2019 ஆம் ஆண்டில், இவை முறையே 1.9 சதவீதம் மற்றும் 1.5 சதவீதம் மட்டுமேயாகும்.
"உலகச் சந்தைகளில் இலங்கையை போட்டித்தன்மையடையச் செய்வதற்கும், உள்ளூர் சமூகங்களின் நலனுக்காக நிலையான முறையில் வேலைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி வருமானங்களை அதிகரிப்பதற்கும் மீனவத் துறைக்கு ஆற்றல் உள்ளது" என்று உலக வங்கியின் இலங்கை, மாலைத்தீவுகள் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹத்தாத்-செர்வோஸ் தெரிவித்தார். "புதிய அறிவு, புத்தாக்கமிகுந்த சிந்தனை மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு ஆகியவை இவ்வாற்றலை உணருவதற்கு மிகவும் முக்கியமானவையாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுநோயால் இலங்கையின் கடல்சார் மீன்பிடித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மீன் பிடிப்பு 20 சதவீதம் குறைந்துள்ளதுடன் ஏற்றுமதி 26 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டுத் தேவைக்கு தேசிய மீன்பிடிப்புக்கள் போதுமானதாக இல்லாதிருப்பதுடன் இப்பற்றாக்குறையானது இறக்குமதியால் நிரப்பப்பட வேண்டும். 2020 ஆம் ஆண்டில், இலங்கை 218 மில்லியன் டொலர் பெறுமதியான மீன்களை இறக்குமதி செய்தது. அதிகப்படியான மீன்பிடித்தல், மீன்வளம் குறைதல், வாழ்விட அழிவு மற்றும் மாசுபாடு காரணமாக கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஆகியவற்றால் இத்துறை ஏற்கனவே சவாலுக்கு உள்ளானது. இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அதிக உள்நாட்டு மீன் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மீன்வளத்தின் நிலையான முகாமைத்துவம் முக்கியமானது.
"கடலோர மீனவத்துறை, கரையோர நீர்வாழ் உயிரின வளங்கள், பல நாள் மீனவத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, மீன்வளத்தின் பசுமையான, மீள்தன்மை மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்கான அறிக்கையின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள், இத்துறையின் நிலைத்தன்மையையும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மீதான அதன் பங்களிப்பையும் மேம்படுத்தும்" என அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மீனவத் துறையின் தற்போதைய நடைமுறைகள், அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான கொள்கை மற்றும் முதலீட்டு பரிந்துரைகளை அறிக்கை வழங்குகிறது. மீன்வள முகாமைத்துவத் திட்டம் மீன் வளங்களின் வழக்கமான தரவு சேகரிப்பின் அடிப்படையில் அமைந்தால், குறைந்து வரும் மீன் வளங்களை நிர்வகிக்க முடியும். நீடிக்க முடியாத மீன்பிடி நடைமுறைகளை மாற்றுவதும் முக்கியமானதாகும். உதாரணமாக, பலநாள் மீனவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை மீன்பிடிப்பர் ஆனால் அவர்களின் பிடிப்பைச் சேமிக்க சரியான படகுகள் இல்லாததால், மீன்பிடிப்பின் தரம் பாதிக்கப்படுகிறது. உண்மையில், இலங்கையின் மஞ்சட் சிறகுச் சூரையின் சதவீதமாகிய 16 சதவீதம் மட்டுமே, பல நாள் மீன்பிடிப்பில் பெரும் சதவீதத்தை உள்ளடக்கியதுடன் ஏற்றுமதித் தரம் வாய்ந்ததாகவுள்ளது. படகுத் தொகுதிகள் மற்றும் மீன் கையாளும் நடைமுறைகளை நவீனமயமாக்குவது, தரையிறங்கும் மீன்களின் தரத்தை மேம்படுத்துவதோடு, அதன் விளைவாக ஏற்றுமதி வருவாயையும் அதிகரிக்கும்.
வாழ்விட அழிவு மற்றும் மாசுபாடு ஆகியன பாதுகாப்பு அணுகுமுறைகளுடன் கவனிக்கப்பட வேண்டும், ஆனால் மீனவத் துறையில் சார்ந்திருப்பதைக் குறைக்க மாற்று வாழ்வாதார விருப்பங்கள் மூலம் ஆதரிக்கப்படலாம் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பெறப்பட்ட படிப்பினைகள் குறிப்பாக மீன்பிடித்தல் ஒரு தெரிவாக இல்லாதபோது, மீன்பிடி சமூகங்களுக்கான வருமான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நிரூபித்துள்ளன.
உலக வங்கியால் நிர்வகிக்கப்படும் பல-நன்கொடையாளர் அறக்கட்டளை நிதியான புரோப்ளூவின் (PROBLUE) ஆதரவுடன் மற்றும் கடற்றொழில் அமைச்சின் (Ministry of Fisheries) நெருக்கமான ஒத்துழைப்புடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அறிக்கை தயாரிப்பில் மீன்பிடி சமூகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் இடம்பெற்றன. மூன்று உப துறைகளிலுள்ள – கடல்சார் மீனவத்துறை மற்றும் கரையோர நீர்வாழ் உயிரின வளங்கள் (கடலோர, கரை கடந்த மற்றும் ஆழ் கடல்கள்) சவால்கள் மற்றும் வாய்ப்புகளை அறிக்கை பகுப்பாய்வு செய்கிறது.