Skip to Main Navigation
சிறப்பம்சக் கதைஜூன் 20, 2023

இலங்கையில் உள்ள வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதற்கான 3 வழிகள்

The World Bank

காய்கறி சந்தையில் ஒரு பெண் விற்பனையாளர், புறக்கோட்டை, இலங்கை 

நாஸ்லி அகமது

கதை சிறப்புக்கூறுகள்

  • இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வதுடன், இவர்களில் 50% க்கும் அதிகமானோர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குள் உள்வாங்கப்படாதோர் ஆவர்
  • கூறுபடுத்தல் மற்றும் மோசமான பரிபாலனம் ஆகியவை வினைத்திறனற்ற சமூகப் பாதுகாப்பு முறைமைக்கு வழிவகுத்துள்ளன
  • ஒரு சிறந்த சமூகப் பாதுகாப்பு முறைமையைக் கட்டியெழுப்புவதற்கு அதிக வெளிப்படைத்தன்மை, மக்ளை உள்ளீர்க்கும் தன்மை, சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் தன்மை மற்றும் பிரஜைகளை ஈடுபடுத்தல் போன்ற பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் அவசியமானதாகும்

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2022 இல் வறுமை வீதம் 25 சதவீதம் வரை அதிகரித்தது. இது 2019 இல் 11.3 வீதத்திலிருந்து பாரியளவில் அதிகரித்துள்ளது. நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வறுமையில் வீழ்ந்திருந்தாலும், பலர் அரசாங்கத்திடம் இருந்து பண உதவிகளைப் பெறவில்லை. சமூக  நலன் பேணல் திட்டங்களின் பலவீனமே இதற்குக் பெரிதும் காரணமாகும். இலங்கையின் வறிய மக்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர், இலங்கையின் முக்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான சமுர்த்தி போன்ற அரசாங்க நலன்புரி திட்டங்களில் உள்வாங்கப்படவில்லை.

இலங்கையில் சமுர்த்தி மற்றும் ஏனைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் நிர்வாகத் திறமையின்மை மற்றும் அரசியல் தலையீடுகளில் மூழ்கிப் போயுள்ளதாகவும், அதன் விளைவாக அவற்றின் நன்மைகள் மிகவும் தேவைப்படுபவர்களை சென்றடையவில்லை என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. நன்மைகளைப் பெறத் தகுதியான பலர் விலக்கப்பட்டுள்ள அதே சமயம் தகுதியற்றவர்கள் உதவியைப் பெறுகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமடைவதற்கு இந்தத் தோல்விகள் பங்களிக்கின்றன. இதற்குத் தீர்வாக, இலங்கைக்கு அதன் ஏழை மக்களுக்கு சேவை செய்யவும் மற்றும் தற்போதுள்ள முறைமையின் பலவீனங்களை வெற்றிகொள்ளவும் ஒரு சமூகப் பாதுகாப்பு முறைமை தேவையானதாகும்.

1. கூறுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு முறைமையை ஒருங்கிணைத்தல்

தற்போதைய சமூக பாதுகாப்பு முறைமையின் கீழ், பல்வேறு அரச நிறுவனங்களால் கையாளப்படும் பல பண பரிமாற்றத் திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையால் சமுர்த்தி திட்டம் கையாளப்படுவதுடன், சமுர்த்தி வங்கிகளைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது. முதியோருக்கான கொடுப்பனவு முதியோர் செயலகத்தால் கையாளப்படுவதுடன், கொடுப்பனவுகள் தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் மாற்றுத்திறனாளிகள் செயலகத்தால் கையாளப்படுவதுடன், தபால் அலுவலகங்கள் மூலம் பணப்பரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த கூறுபடுத்தப்பட்ட தன்மை, புதிய பெறுநர்களை பட்டியலில் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே உள்ள பயனாளிகளுக்கு பணம் வழங்குவதில் தாமதம் உட்பட பல நிர்வாக வினைத்திறனின்மைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகள் பெரும்பாலும் உள்ளூர் அரசாங்க அலுவலகங்களில் மணிக்கணக்கில், சில சமயங்களில் பல நாட்கள், பணம் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டும், மேலும் சில விண்ணப்பதாரர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் சேர அதிக காலம் காத்திருக்க வேண்டும்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனது பதிவை தொடர்ந்து பிற்போட்டுவருகின்றனர். நான் இந்த கிராமத்தில் குடியேறி நான்கு வருடங்கள் ஆகின்றன, ஆனால் நான் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. என்னால் அங்கு சென்று எப்பொழுதும் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது
Lirne Asia அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் போது பதிலளித்த ஒருவர்
The World Bank

panoglobe / Shutterstock.com

நலன்புரி நன்மைச் சபையானது (WBB) கூறுபடுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு முறைமையை நெறிப்படுத்தவும் வினைத்திறனை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் உலக வங்கியின் நிதியுதவியிலான சமூக பாதுகாப்பு வலையமைப்பு செயற்திட்டத்தின் உதவியுடன் நிறுவப்பட்டதாகும். நலன்புரி நன்மைகள் தகவல் முறைமையானது (WBIS) அனைத்து வகையான அரசாங்க பணப் பரிமாற்றங்களையும் ஒருங்கிணைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றும் வகையில் நலன்புரி நன்மைச் சபையின் WBB கீழ் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பணம் பெறுபவர்கள் அரச அலுவலகங்களில் வரிசையில் நிற்காமல், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நலன்புரி நன்மைகள் தகவல் முறைமையின் (WBIS) ஒரு பகுதியாக, சமூகப் பாதுகாப்பைக் கோருபவர்களின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, பணப் பரிமாற்றல் பெறுபவர்களின் பட்டியலை அரசாங்கம் தொடர்ந்து மீளாய்வு செய்து இற்றைப்படுத்த அனுமதிக்கிறது. விண்ணப்பதாரர்களிடமிருந்து தரவைச் சேகரிப்பதற்கு QR குறியீடுகள் மற்றும் Aswasuma மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது.

2. முறைமையில் பலமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உருவாக்குதல்

இலங்கையில் தற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு முறைமையானது நாட்டின் 50% க்கும் அதிகமான வறியவர்களை உள்ளடக்காமல் ஒதுக்கியுள்ளதுடன், வறயோர் அல்லாதவர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. அத்தகைய ஒதுக்கல் மற்றும் உள்ளீர்ப்பு பிழைகளுக்கு ஒரு முக்கிய காரணம் தகுதியை நிர்ணயிப்பதில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதாகும்.

“நான் ஆளும் அரசியல் கட்சிக்காக [அப்போது] வேலைசெய்யத் தொடங்கும் வரை எனக்கு சமுர்த்தி கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுடன் இணைந்து செயற்படும் முக்கிய நபர் ஒருவர் இருந்தார். யாருக்கு சமுர்த்தி வழங்கப்பட வேண்டும் என்பதை அவரிடம் சென்றே சமுர்த்தி உத்தியோகத்தர் பார்க்க வேண்டியிருந்தது”

- Lirne Asia அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் போது பதிலளித்த ஒருவர்

இதை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியைத் தீர்மானிப்பதற்கும்,  தெரிவுச் செயன்முறையில் அரசியல் செல்வாக்கை நீக்குவதற்கும் இன்னும் விரிவான அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும். 2023 இல், நலன்புரி நன்மைகள் சபையானது (WBB) தகுதியான பயனாளிகளை அடையாளம் காண முழு நாட்டையும் உள்ளடக்கிய தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது. வீட்டு மட்டத்தில் சேகரிக்கப்பட்ட சரிபார்க்கக்கூடிய தரவு மூலம் மதிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் பல பரிமாண வறுமை நிலைகளின் (multidimensional poverty levels) அடிப்படையில் நலன்புரி நன்மைகள் சபை தகுதியை தீர்மானிக்கிறது. (இது வறுமை பற்றிய முழுமையான கருத்தைப் பெற்றுக்கொள்ள பண வறுமை, கல்வி மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகள் ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறையைக் கருத்திற் கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும்.) எனவே இந்த முறைமை வெளிப்படையானதாகவும் அரசியல் செல்வாக்கு அற்றதாகவும் உள்ளது.

பழைய முறைமையின் கீழ் 43% மக்களே உள்வாங்கப்பட்டனர். அதனுடன் ஒப்பிடும்போது தற்போது மிகக் குறைந்த வருமானம் பெறும் பிரிவில் சுமார் 60% (அல்லது வறுமையில் உள்ள மக்கள் தொகையில் கீழ் நிலையில் உள்ள ஐந்தில் ஒரு பகுதியினர்) பணப் பரிமாற்றங்களைப் பெற தகுதியுடையவர்கள் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இந்த முறைமை வறிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்காக, தகுதி அளவுகோல் மற்றும் இலக்கு முறையியல் ஆகியவை கிரமமாக ஒழுங்கான இடைவெளியில் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதோடு, மேலும் வலுவானதாகவும் இருக்க வேண்டும்.

3. பிரஜைகளை ஆரம்பமாகவும் தொடர்ச்சியாகவும் ஈடுபடுத்தல்

நெருக்கடிகளின் போது வறிய மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு வினைத்திறனான மற்றும் வெளிப்படையான சமூகப் பாதுகாப்பு முறைமை மிகவும் அவசியமானதாகும். ஆனால் அத்தகைய முறைமையை நிறுவுவது படிப்படியானதொரு செயன்முறையாகும். இத்தகைய முறைமை சிவில் சமூக அமைப்புகள் (CSOs) உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் வெளிப்படையான செயன்முறைகள் மற்றும் தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் ஆரம்பிக்கிறது.

இலங்கை அதன் சமூகப் பாதுகாப்பு முறைமையை திருத்தம்செய்து வருகின்றது என்ற வகையில், ஒரு சமூகப் பாதுகாப்பு முறைமை எவ்வாறு சிறந்த முறையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதற்கு பிரஜைகளை ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் போன்ற அதிர்ச்சிகளால் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களுக்கான உதவியை உறுதிப்படுத்தி, முறைமையானது மாற்றியமைக்கத்தக்கதானதாகும் என்பதை இது உறுதி செய்கிறது. சமூகப் பாதுகாப்பில் உலக வங்கியின் உலகளாவிய அனுபவமானது, செயற்திறமான பிரஜைகள் ஈடுபாட்டைக் கொண்டிருப்பது, தாங்குதிறன் கொண்ட மற்றும் மாற்றியமைக்கத்தக்க சமூகப் பாதுகாப்பு முறைமைகளை நிறுவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, சிலி, பாக்கிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவி வழங்குவதற்காக, ஒரு தற்காலிக அடிப்படையில் மேலும் அதிகமான மக்களை பதிவேட்டிற்குள் கொண்டுவர வேண்டிய நெருக்கடி நேரங்கள் உட்பட, WBIS க்கு நிகரான சமூகப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.   

முறைமையின் பொறுப்புடைமையை உறுதி செய்வதில் பிரஜைகளுக்கும் ஒரு பங்கு உண்டு. சமூகப் பாதுகாப்பு முறைமை உண்மையில் களத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பற்றி அவ்வப்போது மீளாய்வு செய்வதற்கும், குறைகளைக் கையாளும் ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கு பிரஜைகளின் கருத்துக்களை உள்ளடக்குவது அவசியமானதாகும். நலன்புரி நன்மைகள் சபையானது முறைமையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தொடர்ச்சியான சிக்கல்களைக்  முறையிட ஒரு குறை தீர்க்கும் பொறிமுறையை அமைப்பதுடன், அதனால் குறைகளை நிவர்த்திக்க முடியும்.

பல வருடங்களாக இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்காக செயற்பட்டு வரும் நிலையில், இலங்கையின் வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மிகவும் நன்மையளிக்கக்கூடிய தாங்குதிறன் கொண்ட மற்றும் நியாயமான சமூகப் பாதுகாப்பு முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பமாக இந்த நெருக்கடி நிலைமையை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரமாகும்.

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image