Skip to Main Navigation
செய்தி வெளியீடுபிப்ரவரி 28, 2023

இலங்கைக்கு விஜயம் செய்த உலக வங்கியின் உப தலைவர் மக்களைப் பாதுகாப்பதற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்

கொழும்பு, 2023 பெப்ரவரி 28 இலங்கைக்கான தனது நான்கு நாள் விஜயத்தை இன்று நிறைவு செய்த உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் மார்டின் ரைஸர், இலங்கை தனது பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும் முக்கியமான சீர்திருத்தங்களை அமுல்படுத்த தாங்குதிறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்கான பாதைக்கு வழிவகுக்கவும் உலக வங்கி தொடர்ச்சியாக உதவும் என்று உறுதியளித்தார்.

திரு. மார்டின் ரைஸர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க, திறைசேரிச் செய்லாளர், மத்திய வங்கி ஆளுநர், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் ஆகியோரையும் இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், சிந்தனையாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார்.

இலங்கை மக்கள், நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் நெருக்கடியினால் மோசமாகப் பாதிக்கப்பட்ள்ளனர். இலங்கைக்கு ஒரு புதிய அபிவிருத்தி முன்மாதிரி​ (A new development model) அவசியம் என்பதை தற்போதய நெருக்கடியின் உக்கிரமான தன்மை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. எனினும், அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் தொடர்பாக கூடுதலான நம்பிக்கையும் அவை குறித்த புரிந்துணர்வும் மக்களுக்கு தேவை”  என்று தெரிவித்த திரு ரைஸர்,  “மேம்படுத்தப்பட்ட தொடர்பாடல்கள், சீர்திருத்தம் மற்றும் சீராக்கத் திட்டத்தின் தொடர்ச்சியான அமுலாக்கம் என்பனவும் சீர்திருத்தங்கள் குறித்து மக்கள் பொறுமை இழப்பதையும் மாற்றத்திற்கான வாய்ப்பு இழக்கப்படுவதையும் தவிர்ப்பதற்குச் சர்வதேச கடன் நிவாரணம் மற்றும் புதிய நிதியுதவிகள் விரைவாகக் கிடைப்பதும் அவசரத் தேவையாகும்என்று கூறினார்.

நிறுவன மற்றும் நிதியியல் மேற்பார்வையை வலுப்படுத்துவதன் மூலமும் சிறந்த கடன் முகாமைத்துவத்தின் மூலமும் இலங்கையில் பொருளாதார ஆளுகையை மாற்றியமைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து திரு. ரைஸர் தனது விஜயத்தின்போது கலந்துரையாடினார். சீர்திருத்தங்களுக்குப் பொதுமக்களின் ஆதரவைப் பெற்று அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்கு, கூடுதலான வெளிப்படைத்தன்மை, மேம்படுத்தப்பட்ட நிர்வாகம், தொழில் உருவாக்கத்திற்கான ஆதரவு, வறியவர்களை மையப்படுத்திய பாதுகாப்பு என்பன மிகவும் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

சுகாதார மற்றும் விவசாயத் துறைகளில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை நேரில் அவதானிப்பதற்காகவும் இலங்கையின் அபிவிருத்தித் தேவைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்காகவும் திரு. ரைஸர் நாட்டின் வடமத்திய  மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் விஜயம் செய்தார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தோன்றியபோது உதவ முன்வந்த முதலாவது அமைப்பு உலக வங்கியாகும். நெருக்கடியின் மோசமான தாக்கங்களிலிருந்து வறிய மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்காக, வங்கியானது ஏற்கனவே நடைமுறையிலிருந்த வேலைத்திட்டங்களில் இருந்து 325 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவிக்காக மீள் ஒதுக்கியது. சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடம் (IDA) இருந்து சலுகை அடிப்படையிலான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள இலங்கை விடுத்த வேண்டுகோளையும் உலக வங்கி கடந்த டிசெம்பர் மாதத்தில் அங்கீகரித்தது. குறைந்த வட்டி வீதங்களில் வழங்கப்படும் இத்தகைய நிதியுதவி, பொருளாதாரத்தை உறுதிநிலைப்படுத்தவும் வறுமை மற்றும் பசிப்பிணியை எதிர்நோக்கும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தத் திட்டத்தை அமுல்படுத்த நாட்டிற்கு உதவி புரியும்.

தனியார் துறையின் தலைமையிலான தொழில் உருவாக்கம், யாவரையும் உள்ளடக்கிய கொள்கை, மனித மற்றும் இயற்கை மூலதனத்தைப் பேணிப் பலப்படுத்துதல், பசுமை வளர்ச்சிப் பாதையை நோக்கிய மாற்றம் ஆகியவற்றில் கவனத்தைச் செலுத்தும் வகையிலாக புதிய நாட்டுப் பங்குடமைப்பு சட்டகம் ஒன்றை அடுத்த நான்கு ஆண்டுகளில் (2023-2026) நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்களை உலக வங்கிக் குழுமம் ஆரம்பித்துள்ளது.

தொடர்பு

கொழும்பில்:
திலினிக்கா பீரிஸ்
+94 (011) 5561347
வொஷிங்டனில்:
எலேனா கரபான்
+1 (202) 473-9277

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image