Skip to Main Navigation
செய்தி வெளியீடு பிப்ரவரி 4, 2020

இலங்கை அதன் அபிவிருத்தியினை விவசாயம் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக அதிகரிக்க முடியும்


கொழும்பு, 2020 பெப்ரவரி 4- தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத் தலைவரான ஹார்ட்விக் ஷாஃபர் நான்கு நாள் பயணத்தை நிறைவு செய்த நிலையில், உலக வங்கி இலங்கையின் அனைத்து மக்களினதும் நலனுக்காக இலங்கையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்குத் தொடர்ந்தும் தான்  அளித்து வரும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

தனது வருகையின் போது, ஷாஃபர் புதிய அரசாங்கத்தின் கீழான நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் உலக வங்கியின் நிதி மற்றும் அறிவு  வளங்களை அதிகபட்ச விளைவினை பெற எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி நன்கு புரிந்து கொண்டார்.

"தொழில்நுட்பமும் புத்தாக்கமும் இலங்கையை எதிர்கால வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும்" என்று ஷாஃபர் கூறினார். "கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான எனது விஜயத்தின் போது, பொது போக்குவரத்தினை வழங்குவதில் போக்குவரத்து மற்றும் நீரில் சில புதுமையான தீர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கும் தனியார் துறையை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை நான் அவதானித்தேன்" என்றும் கூறினார்.

அண்மையில் நடந்த தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஷாஃபர் வாழ்த்தியதுடன் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு அபிலாஷைகளை உணருவதற்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஆதரவையும் உறுதிப்படுத்தினார். இலங்கை மத்திய வங்கியின் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பேராசிரியர் டபிள்யு  டி லக்ஷ்மன் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் திரு. சஜித் ஆட்டிகல உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.

"இலங்கை இன்று தெற்காசியாவின் சிறந்த மனித அபிவிருத்திக் குறிகாட்டிகளைக் கொண்ட ஒரு உயர் நடுத்தர வருமான நாடாகும்.  60 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான பங்காளியாக இத்தகைய மகத்தான சாதனைகளை சாதிக்க உதவியதில் உலக வங்கி பெருமிதம் கொள்கிறது என்று ஷாஃபர் கூறினார். "எமது புதிய நாட்டு மூலோபாயத் தயாரிப்பு மற்றும் அபிவிருத்தியில் பங்காளிகளாக எங்கள் ஒத்துழைப்பை வழங்க அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்பார்கின்றோம்." என்றும் தெரிவித்தார்.

தனது வருகையின் போது, மனித மற்றும் பௌதீக மூலதனத்தில் முதலீடுகள், பொதுத்துறை சீர்திருத்தங்கள், இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விரைவாக வயதுமூப்படையும் சனத்தொகையினரது  சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற அரசாங்கத்தின் சில முக்கிய முன்னுரிமைகள் குறித்து ஷாஃபர் கலந்துரையாடினார். நிலையான அபிவிருத்திக்குரிய முக்கிய காரணம் என்ற வகையில் சுற்றுலாத்துறையில் அரசாங்கத்தின் ஆர்வத்தைப் பாராட்டினார். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயத்தில் புதிய நுட்பங்களை ஊக்குவித்தல், அதே நேரத்தில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பெறுமதியினை அதிகரிக்கும் முறைகளை உருவாக்குதல் ஆகியவை  பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

உலக வங்கியின் நிதியுதவி பெற்ற கிராமப்புற நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட ஷாஃபர் கேகாலை மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இது கிராமப்புற சமூகங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரை வழங்கும் இலங்கையின் ஒரேயொரு திட்டமாகும். சிறந்த மற்றும் நம்பகமான நீர் வழங்கல் சேவைகளுக்காக உட்கட்டமைப்பு செலவின் ஒரு பகுதியை ஈடுசெய்ய உறுதியளித்துள்ள பயனாளிச் சமுதாயங்களுடன் அவர் உரையாடினார். பாதுகாப்பை மேம்படுத்துதலிலும் மற்றும் நெரிசலைக் குறைத்தலிலும் பல்மாதிரி போக்குவரத்து முனையம் (Multimodal Transport Terminal (KMTT) உதவும் என்பதை அறிய ஷாஃபர் கண்டியிலுள்ள உத்தேச பல்மாதிரி போக்குவரத்து முனைய (Multimodal Transport Terminal)  தளத்தையும் பார்வையிட்டார்.

சர்வதேச அபிவிருத்திக் கழகம் (IDA) மற்றும் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD) ஆகியன இலங்கையில் 18 திட்டங்களை கொண்டுள்ளன. (மொத்த தேறிய அர்ப்பணிப்பு அண்ணளவாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்).


தொடர்பு

Colombo
Dilinika Peiris-Holsinger
+94115561325
dpeiris@worldbank.org
Washington D.C.
Elena Karaban
+1 (202) 473-9277
ekaraban@worldbank.org
Api
Api